கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு இதுவரை 18,758 பேர் விண்ணப்பம்: அக்டோபர் 8ம் தேதி கடைசி

சென்னை: பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புகளுக்கு 15,732 பேரும், பி.டெக் படிப்புகளுக்கு 3,026 பேரும் என இதுவரை மொத்தம் 18,758 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், நெல்லை, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீராபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) 480 இடங்கள் இருக்கின்றன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 72 இடங்கள் (15 சதவீதம்) போக, மீதமுள்ள 408 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. திருவள்ளூர் மாவட்டம் கோடுவளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 20 இடங்கள் இருக்கிறது.

இதில், உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கான (பி.டெக்) 40 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 6 இடங்கள் (15 சதவீதம்) போக, மீதமுள்ள 34 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதைப்போன்று ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்டப்படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது. இந்த படிப்புகளுக்கு பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2021-22ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tanuvas.ac.in மற்றும் www2.tanuvas.ac.in என்ற இணையதளங்களில் விண்ணப்பிப்பது கடந்த 9ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. அக்டோர் 8ம் தேதி மாலை 6 மணி வரை காலஅவகாசம் உள்ள நிலையில் மாணவர்கள் ஆர்வமாக ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புகளுக்கு 15,732 பேரும், பி.டெக் படிப்புகளுக்கு 3,026 பேரும் என மொத்தம் 18,758 பேர் விண்ணப்பித்துள்ளனர். என்ஆர்ஐ மாணவர்கள் நவம்பர் 8ம் தேதி மாலை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Related Stories: