தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்கக்கோரும் வழக்கின் விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு: உச்சநீதிமன்றம்

டெல்லி: தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்கக்கோரும் வழக்கின் விசாரணையை பிற்பகல் 2 மணிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்தியா முழுவதும் நவம்பர் 4-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அன்று அதிகாலை முதல் இரவு வரை தொடர்ந்து பட்டாசுகள் வெடிக்க அனுமதி கோரி தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த மனுவில் காலையில் 4 மணி நேரமும், மாலையில் 4 மணி நேரமும் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இந்தநிலையில் தீபாவளி பண்டிகையின் போது அதிகாலை முதல் இரவு வரை தொடர்ந்து பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசடைவதாக கூறி, உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு பொதுநல வழக்குகள் தொடரப்பட்டது.  

இவ்வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீபாவளி நாளில் காலை ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமும் என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதியளித்தது. பகல் நேரத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை என தீர்ப்பு வழங்கியது. இதனால் பலர் பட்டாசு உற்பத்தி செய்யும் வேலையை இழந்தனர்.

இந்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை இன்னும் சில மாதங்களில் வர உள்ளதால், பட்டாசுகள் வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க கோரி தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

தற்போது இந்த மனுவை விதரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், பட்டாசு தயாரிப்பின் போது விதிமுறைகளை மீறுவதால் அப்பாவிகள் உயிரிழக்க நேரிடுகிறது என தெரிவித்துள்ளனர். மேலும் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடை காரணமாக பலர் வேலை இழந்திருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து வழக்கின் விசாரணையை பிற்பகல் 2 மணிக்கு உச்சநீதிமன்ற ஒத்திவைத்துள்ளது.

Related Stories:

>