×

கிளப்கள், சொசைட்டிகளில் சட்டத்திற்கு உட்பட்ட நடவடிக்கைகள் நடைபெறுகிறதா என்பதை ஆய்வு செய்வது காவல்துறையின் கடமை : நீதிபதி கருத்து!!

சென்னை : தமிழகம் முழுவதும் உள்ள பொழுதுபோக்கு கிளப்களில் பதிவுத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள தனியார் பொழுபோக்கு கிளப் சார்பில் உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சட்டத்திற்கு உட்பட்டு கிளப் நடத்தும் நிலையில், காவல்துறையினர் அடிக்கடி கிளப்களில் சோதனை நடத்தி துன்புறுத்துவதாகவும் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கிளப்புக்கு எதிராக ஏற்கனவே கிரிமினல் வழக்கு மற்றும் சூதாட்ட வழக்கு உள்ளதாக வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் பதவி செய்து கொண்ட நீதிபதி, கிளப்கள், சொசைட்டிகள் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்வதற்கு காவல்துறைக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவித்தார் மேலும், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, போலீஸ் சோதனைக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தார். அத்துடன், தமிழ்நாடு முழுவதும் உள்ள பொழுதுபோக்கு கிளப்களில், பதிவுத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் கிளப்புகள் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தால் பதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். கிளப்களில் சட்டத்துக்கு உட்பட்ட நடவடிக்கைகள் நடைபெறுகிறதா என்பதை ஆய்வு செய்து 12 வாரங்களில் பதில் அளிக்க பதிவுத்துறைக்கு நீதிபதி ஆணையிட்டார்.

Tags : கிளப்
× RELATED தமிழ்நாட்டில் 39 தொகுதியில் வேட்பு...