தீக்குளிப்பவர்களை காப்பாற்ற கலெக்டர் அலுவலக வாசலில் தண்ணீர் தொட்டி அமைப்பு

நெல்லை :  நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த சில ஆண்டுகளாக தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் கந்துவட்டி பிரச்னை காரணமாக தென்காசி காசிதர்மத்தை சேர்ந்த இசக்கிமுத்துவின் குடும்பத்தினர் 4 பேர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்து பலியானது பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக கலெக்டர் அலுவலகத்தில் 5க்கும் மேற்பட்ட வாசல்கள் மூடப்பட்டன. மேலும் மனு கொடுக்க வருவோருக்கு கடும் பரிசோதனைகளும் நடந்தன.

 இருப்பினும் நெல்லை மாவட்டத்தைப் பொருத்தவரை தீக்குளிப்பு சம்பவங்கள் இன்னும் குறைந்தபாடில்ைல. திங்கட்கிழமைதோறும் ஏதேனும் ஒருவர் தற்கொலை மிரட்டலோடு வந்து மனு கொடுப்பது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினத்தில்கூட விகேபுரத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் குடும்பத்தோடு தற்கொலைக்கு கலெக்டர் அலுவலகம் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இவ்வாறு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயலும்போது, சம்பவ இடத்தில் போலீசாரால் அவர்களை பாதுகாப்பதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன. குறிப்பாக அவசரத்திற்கு தண்ணீர் கிடைப்பதில்லை. சில சமயங்களில் குடிநீர் பாட்டில்களை தற்கொலை எண்ணத்தோடு வருவோரின் தலையில் ஊற்ற வேண்டியதுள்ளது. எனவே மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு நிற்பவர்களை உடனடியாக மீட்கும் வகையில் கலெக்டர் அலுவலக வாசலில் தற்போது புதிதாக தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

 தொட்டியில் இருந்து தண்ணீரை பீய்ச்சி முடிக்கும் வகையில் டியூப்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. மண்ணெண்ணெய் ஊற்றி நிற்பவர்களை உடனடியாக அமர வைத்து, அவர்கள் தலையில் தண்ணீரை பீய்ச்சியடிக்க வசதி செய்யப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் தொட்டி அடுத்த வாரத்தில் இருந்து செயல்பாட்டு வர உள்ளது.

Related Stories: