மானூர் பகுதியில் தீப்பெட்டி தொழிலுக்கு அனுமதி மறுப்பு-கலெக்டர் ஆபீசில் பொதுமக்கள் மனு

நெல்லை :  மானூர் பகுதியில் குடிசைத் தொழிலாக நடக்கும் தீப்பெட்டி தொழிலுக்கு வருவாய்த்துறையினரின் அனுமதி மறுப்பைக் கண்டித்து மேல இலந்தைகுளம் கிராம மக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். நெல்லை அடுத்த மானூர் அருகேயுள்ள இலந்தைகுளம் கிராம மக்கள் சுடலைமணி என்பவரது தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு அளித்தனர் மனு விவரம்:

மேல இலந்தைகுளம் பகுதியில் மத்திய கலால் வரித்துறை அனுமதியுடன் ஜிஎஸ்டி எண் பெற்று சுமார் 18 தொழிலாளர்கள் தீப்பெட்டி தொழில் செய்து வருகிறோம்.  எங்கள் பகுதியில் மட்டுமின்றி பெரும்பாலான கிராமங்களில் தீப்பெட்டி தொழில் குடிசை தொழிலாக உள்ளது. எளியவர்களின் வாழ்வாதாரம் பேணும் வகையில் இத்தொழில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சுமார் 45 தினங்களுக்கு முன்பாக தேவர்குளம் போலீசார் மற்றும் மானூர் தாசில்தார் தலைமையில், நாங்கள் சட்டவிரோதமாக தொழில் செய்வதாகக் கூறி தொழில் நிறுவனத்தை மூடும்படி கூறினர்.

அதன்பின்னர் நாங்கள் தீப்பெட்டிகளை உற்பத்தி செய்யவில்லை. சரியான வழிகாட்டுதல் இன்றி தவிக்கும் எங்களுக்கு தொழிலை தொடர்ந்து நாங்கள் செய்ய அனுமதி வழங்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.கோவில்பட்டி, சாத்தூர் விருதுநகர் வட்டாரத்தில் எளியவர்களின் வாழ்வாதாரம் பேணும் வகையில் இத்தொழில் நடந்து வருகிறது. ஆனால் எங்களை மட்டும் குறிவைத்து தாசில்தாரும், காவல்துறையினரும் நடவடிக்கை எடுப்பது உள்நோக்கம் கொண்டதாகும். எனவே நாங்கள் தொழிலை தொடர்ந்து நடத்த வழி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.  இவ்வாறு அந்த மனுவில் புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>