தச்சநல்லூரில் விரிவாக்கம் செய்த சாலையில் அகற்றப்படாத மின்கம்பங்கள்-மாற்றி அமைக்கப்படுமா?

நெல்லை :  தச்சநல்லூரில் விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையின் நடுவே  இதுவரை அகற்றப்படாத மின்கம்பங்களால் வாகனங்கள் மோதி மின்கம்பங்கள் சேதம் அடைவதோடு விபத்து அபாயம் நிலவுகிறது. இதனால் அவதிப்படும் வாகனஓட்டிகள் உள்ளிட்டோர் இதுவிஷயத்தில் மின்துறை தனிக்கவனம் செலுத்தி விரைவில் மாற்றி அமைக்குமா? என எதிர்பார்க்கின்றனர்.

 நெல்லை மாநகராட்சி, தச்சநல்லூர் மண்டலத்திற்கு உட்பட்ட தச்சநல்லூர் சந்திமறித்தம்மன் கோயில் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் நிலவியது.

இதையடுத்து மக்கள் நலன் மற்றும் மாநகர சாலை விரிவாக்கத்தின் அடிப்படையில் தச்சநல்லூரில் காந்தி சிலை பகுதியில் துவங்கி, மதுரை புறவழிச் சாலை பகுதி வரை என சுமார் 200 மீட்டர் தொலைவிற்கு நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை விரிவாக்கம் செய்தனர். குறிப்பாக 8 மீட்டராக இருந்த சாலையானது 14 மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட்டது.

 இத்தகயை  சாலை விரிவாக்கத்தின் போதே சாலையில் உள்ள மின்கம்பங்களை அகற்றி, ஓரமாக வைத்திட நடவடிக்கை எடுத்த  நெடுஞ்சாலைத்துறையினர், இதற்கான தொகையையும் மின்வாரியத்திற்கு ஏற்கனவே செலுத்திவிட்டனர்.

ஆனால், நாட்கள் பல கடந்தும், மின்வாரியத்தினர் மின்கம்பங்களை சாலையில் இருந்து அகற்றிட எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சாலையின் நடுவே மின்கம்பங்கள் இருப்பது தெரியாமல் சில வாகனங்கள் மோதி வருகின்றன. கடந்த வாரத்தில் வேகமாக வந்த லாரி மின்கம்பத்தில் மோதியதில் மின்கம்பம் சேதத்திற்கு உள்ளானது. சாலை ஓரமாக ஆட்டோ டிரைவர்களும், இருசக்கர வாகன ஓட்டிகளும் மின்கம்பத்தை கடந்து செல்லும்போது சிரமத்தை உணருகின்றனர்.

 இதனால் அவதிப்படும் பொதுமக்கள், இதுவிஷயத்தில் சம்பந்தப்பட்ட மின்துறை தனிக்கவனம் செலுத்தி, மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் நடக்கும் முன்பாக, சாலையின் நடுவே காணப்படும் மின்கம்பங்களை மாற்றி அமைக்க முன்வருமா? என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Related Stories:

>