சென்னை அம்பத்தூரில் 7 மாத கர்ப்பத்தைக் கலைக்க நாட்டு மருத்து சாப்பிட்டு வடமாநில இளம்பெண் உயிரிழப்பு

சென்னை: 7 மாத கர்ப்பத்தைக் கலைக்க நாட்டு மருந்து சாப்பிட்ட வடமாநில இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அம்பத்தூரில் பிரசவத்திற்கு பயந்து கர்ப்பத்தைக் கலைக்க நாட்டு மருந்து சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்து உள்ளார். அம்பத்தூர் அருகே உள்ள கொரட்டூரில் பிரதாப் உள்கா-மனைவி குமாரி கஞ்சக்கா ஆகியோர் வசித்து வருகின்றனர். ஒடிசாவைச் சேர்ந்த இவர்கள் இருவரும் கொரட்டூரில் தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், தற்போது குமாரி கஞ்சக்கா 7 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஒடிசாவில் உள்ள குமாரியின் அண்ணி பிரசவத்தின் போது இறந்து விட்டதாக தகவல் வந்தது. இதையடுத்து அந்த இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பிரதாப் உள்கா- குமாரி கஞ்சக்கா தம்பதியினர் ஒடிசா சென்றுள்ளனர்.

அங்கு இறுதிச் சடங்கில் பங்கேற்ற குமாரியிடம் அவருடைய உறவினர்கள், கர்ப்பிணியின் இறப்பு குறித்தும், குழந்தை பிறக்கும் போது ஏற்படும் சிரமங்கள் குறித்தும் பேசியுள்ளனர். இதுபோல தானும் குழந்தை பிறக்கும் போது இறந்து விடுவோமோ என்று அஞ்சிய குமாரி, தனது வயிற்றில் வளர்ந்து வரும் கருவைக் கலைக்க முடிவு செய்துள்ளார்.

பின்னர் கருக்கலைப்புக்கான நாட்டு மருத்தை வாங்கி சாப்பிட்டு உள்ளார். நாட்டு மருந்து சாப்பிட்டதில் இருந்தே குமாரிக்கு அவ்வப்போது உடல் நலக்கோளாறு ஏற்பட்டு வந்துள்ளது. ஆனால் அதை கணவரிடம் தெரிவிக்காமல் இருந்துள்ளார். இதனையடுத்து குமாரியின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலையில் இருந்த குமாரியின் கணவருக்கு, அவர்கள் தங்கி இருக்கும் வீட்டு உரிமையாளர் செல்போனில் தொடர்பு கொண்டு, குமாரி மயங்கி கிடப்பதாகவும் உடனடியாக வந்து மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனால் உடனடியாக அவர் தனது மனைவியை கே.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குமாரியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாக கூறி உடனடியாக அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குமரியை காப்பாற்ற முடியாமல் அவர் இறந்துள்ளார்.

Related Stories:

>