வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம்: தமிழகத்தில் 500 இடங்களில் ஆர்ப்பாட்டம்; பஸ், ரயில் மறியலில் ஈடுபட்ட எம்பி, எம்எல்ஏக்கள் கைது

புதுடெல்லி: ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, நாடு முழுவதும் விவசாயிகள் நேற்று போராட்டம் நடத்தினர். பஞ்சாப், அரியானா, கேரளா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் தீவிரமாக நடந்தது.  தமிழகத்தில் 500 இடங்களில் விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பஸ், ரயில் மறியலில் ஈடுபட்ட எம்பி, எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர். ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, டெல்லி எல்லையில் கடந்த ஆண்டு நவம்பரில் இருந்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இதை முடிவுக்கு கொண்டு வர, ஒன்றிய அரசு இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர். இந்நிலையில், புதிய வேளாண் சட்டங்கள் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு  (பாரத் பந்த்) 40 விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்த ‘சம்யுக்தா கிசான் மோர்ச்சா’  அழைப்பு விடுத்தது. இதற்கு காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், தொழிற்சங்கங்களும் ஆதரவு  தெரிவித்தன.

நாடு தழுவிய போராட்டம் நேற்று காலை 6 மணிக்கு தொடங்கியது. பெரும்பாலான மாநிலங்களில் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். பஞ்சாப், அரியானா, ஒடிசா, மேற்குவங்கம், கேரளா மற்றும் டெல்லி எல்லையை ஒட்டிய பகுதிகளில் போராட்டம் பெரிய அளவில் நடந்தது. பஞ்சாப்பில் அமிர்தசரஸ், ரூப்நகர், ஜலந்தர், பதன்கோட், சங்ருர், மொகாலி, லூதியானா, பெரோஸ்பூர், பதின்டா ஆகிய நகரங்களில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை விவசாயிகள் முடக்கினர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பல இடங்களில் விவசாயிகள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் செய்ததால் ரயில் போக்குவரத்து முடங்கியது.

தமிழகத்தில் தலைவர்கள் கைது: சென்னை அண்ணா சாலை தாராபூர் டவர் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் சிபிஐ (எம்.எல்) அமைப்பு சார்பில் போராட்டம் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., சிபிஐ (எம்.எல்) மாநில செயலாளர் என்.கே.நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். தடையை மீறி போராட்டம் நடந்ததால் அங்கு 500க்கும் மேற்பட்ட போலீசார் திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பகவலன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்ட கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் உட்பட 850க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து சிந்தாதிரிப்பேட்டை, சிவானந்தா சாலையில் உள்ள திருமண மண்டபங்களில் வைத்தனர். மறியலால் அண்ணா சாலையில் 2 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதித்தது. கிண்டியில் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், சிஐடியூ மாநில பொதுச் செயலாளர்  எஸ்.ஏழுமலை, தமிழக விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் என 500க்கும்  மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க தலைவர் விஸ்வநாதன் தலைமையில் எழும்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற 80 பேரை போலீசார் ைகது   செய்தனர்.

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மனித நேய மக்கள் கட்சி மற்றும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். எஸ்டிபிஐ கட்சி சார்பில் கிண்டி  மெட்ரோ ரயில் நிலையம் முன்பு ஆலந்தூர் தொகுதி தலைவர் கே.ஜாகிர் உசேன் தலைமையிலும், மூலக்கொத்தளம் மாநகராட்சி 5வது  மண்டல அலுவலகம் எதிரே வடசென்னை மாவட்ட செயலாளர் புஷ்பராஜ் தலைமையில் நடந்த மறியல் போராட்டம் நடந்தது.

குமரி மாவட்டத்தில் 13 இடங்களில்  மறியல் போராட்டம் நடந்தது. நாகர்கோவில்  அண்ணா பஸ்நிலையம் முன்பு போராட்டத்தை விஜய்வசந்த் எம்பி தொடங்கி வைத்தார். திமுக மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் உள்பட 140 பேரை  கோட்டார் போலீசார் கைது செய்தனர்.  மதுரை: மதுரை நகரில் ரயில் மறியல்  போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய தொழிலாளர்கள்  கூட்டமைப்பினர் 398 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை ஸ்காட் ரோடு தலைமை தபால்நிலையம் முன்பு முற்றுகையில் ஈடுபட்ட மதுரை எம்.பி வெங்கடேசன் உள்பட 285  பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திராவில் வேளாண்  சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், திருப்பதி ரயில் நிலையம், விமான  நிலையம் மற்றும் விசாகப்பட்டினம் இரும்பு தொழிற்சாலையை தனியாருக்கு  தாரைவார்ப்பதை கண்டித்தும் அனைத்து கட்சிகளும் நேற்று பந்த்தில் ஈடுபட்டன. அரசு பேருந்துகள் ஓடவில்லை. மேற்கு வங்கம், கர்நாடகா, பீகாரிலும் விவசாயிகள் போராட்டத்திற்கு பெரும்  ஆதரவு இருந்தது. மாலை 4 மணி வரை நடந்த முழு அடைப்பு போராட்டம்,  அசம்பாவிதங்கள் இன்றி சுமுகமாக வெற்றி அடைந்ததாக விவசாயிகள் சங்க  தலைவர் திகைத் தெரிவித்தார்.

* 25 ரயில்கள் பாதிப்பு

விவசாயிகள் போராட்டத்தால், 25 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டதாக ரயில்வே அமைச்சகம் தகவல்  தெரிவித்தது. டெல்லி, அம்பாலா, பெரோஸ்பூர் பகுதிகளில் 25 ரயில்களின் புறப்பாடு மற்றும் வருகையில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

* 3 கிமீ டிராபிக்ஜாம்

டெல்லியை  ஒட்டியுள்ள குருகிராமில் இருந்து தினமும் ஏராளமான மக்கள் வேலைக்காக  டெல்லியின் பல்வேறு பகுதிகளுக்கு வந்து செல்வது வழக்கம். அவர்கள்  தினமும் பயன்படுத்தும் டெல்லி-குருகிராம் விரைவுச்சாலையை விவசாயிகள்  நேற்று முடக்கினர். இதனால், சிர்ஹால் சுங்கச்சாவடி உள்ளிட்ட பல பகுதிகளில்  மைல் நீளத்திற்கு வாகனங்கள் நகர முடியாமல் ஸ்தம்பித்தன. 15 அடி அகலம் கொண்ட  இந்த சாலையில் 3 கிமீ தூரத்திற்கு வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. மாலை 4  மணிக்குப் பிறகே நெரிசல் குறைந்தது.

Related Stories: