‘டெஸ்ட்’ போதும்... மொயீன் முடிவு

துபாய்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணி ஆல் ரவுண்டர் மொயீன் அலி  அறிவித்துள்ளார். 2014ல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக பிப்ரவரி மாதம் டி20தொடரிலும்,   மார்ச் மாதம்  ஒருநாள் தொடரிலும் அறிமுகமான மொயீன் (34 வயது), அதே ஆண்டு ஜூன் மாதம் இலங்கைக்கு எதிராக டெஸ்ட் போட்டியிலும்  களம் கண்டார். இப்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஆல் ரவுண்டராக  ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள மொயீன், டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இது குறித்து மொயீன் கூறியதாவது: என்னால் முடிந்தவரை கிரிக்கெட்டை அனுபவித்து விளையாட விரும்புகிறேன். டெஸ்ட் போட்டிகளில்  இதுவரை சாதித்ததை நினைத்து மகிழ்ச்சியும், மனநிறைவும் அடைகிறேன். ஒரு பந்துவீச்சாளராக எந்த வீரரையும் ஆட்டமிழக்கச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் கிடைக்கும் மனநிறைவு தனிச் சிறப்பு மிக்கது. உங்கள் நாள் சிறப்பாக அமைந்து விட்டால் மற்ற வகையான போட்டிகளை விட டெஸ்டில் அதிகம் சாதிக்க முடியும்.

ஏற்கனவே இந்தியாவுக்கு எதிரான தொடருடன் ஓய்வு பெற முடிவு செய்திருந்தேன். அதற்காக ஓல்ட் டிரபோர்டில் நடைபெற இருந்த டெஸ்ட் ஆட்டத்துக்காக ஆவலுடன் காத்திருந்தேன். ஆனால், எதிர்பாராத வகையில் அந்த ஆட்டம் ரத்தானதும், ஓய்வு பெறும் திட்டத்தை அமலாக்க முடிவு செய்து விட்டேன். முன்பு போல்  டெஸ்டில் முழு கவனத்துடன் விளையாட முடியவில்லை.  சில ஆட்டங்களில் மோசமாகவும் விளையாடி இருக்கிறேன். அதனால் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன். ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. இவ்வாறு மொயீன் கூறியுள்ளார். மொயீன் இதுவரை 64 டெஸ்டில் விளையாடி 2914 ரன் (அதிகம் 155*, சராசரி 28.29, சதம் 5, அரை சதம் 14) மற்றும் 195 விக்கெட் (சிறப்பு 6/53) எடுத்துள்ளார்.

Related Stories:

>