இளம் மருத்துவர்களை கால்பந்து போல உதைத்து விளையாடக் கூடாது: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்..!

டெல்லி: உயர்சிறப்பு மருத்துவப்படிப்புக்கான நீட்-எஸ்.எஸ். பாடத்திட்ட மாற்றத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு பாடத்திட்டத்தில் கடைசி நிமிடத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு மாணவர்கள் தரப்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இதுதொடர்பாக  41 முதுநிலை மருத்துவ படிப்பு முடித்த மருத்துவர்கள் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தனர். நீட் எஸ்எஸ் பாடத்திட்ட மாற்றத்தை எதிர்த்த மனுவை டிஒய் சந்திரசூட், பி.வி.நாகரத்னா அமர்வு விசாரித்தது.

அப்போது நீட்-எஸ்.எஸ். பாடத்திட்ட கடைசி நேர மாற்றத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இளம் மருத்துவர்களை கால்பந்து போல ஒன்றிய அரசு உதைத்து விளையாடக் கூடாது. நீட்-எஸ்.எஸ். பாடத்திட்ட மாற்றத்தை அடுத்த ஆண்டு அமல்படுத்த முடியாதா? மருத்துவர்கள் தேர்வுக்கான தயாரிப்பை தொடங்கிய பிறகு இடையில் பாடத்திட்டத்தை மாற்றியது ஏன்? என கேள்வி எழுப்பியது. சிலகாலமாக ஆலோசிக்கப்பட்டு வந்த பாடத்திட்ட மாறுதலையே அமல்படுத்தி உள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

மருத்துவ ஆணைய பதிலுக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் சுகாதார அமைச்சகத்துடன் கலந்தாலோசிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் மருத்துவர்கள் சார்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அடுத்த திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>