முந்தைய ஆட்சியில் தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என அதிமுகவினர் விளம்பரம் மட்டுமே செய்தனர் : அமைச்சர் செந்தில் பாலாஜி சாடல்!!

சென்னை:‘‘மின்னகம் மின்நுகர்வோர் சேவை மையம் திறந்து வைக்கப்பட்டு இன்றுடன் 100 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், நேற்று வரை 3.56 லட்சம் புகார்கள்  வரப்பெற்றது. இதில், 3.50 லட்சத்திற்கும் மேற்பட்ட புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது’’ என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

இதுகுறித்து மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அளித்த பேட்டி:மின்னகம் மின்நுகர்வோர் சேவை மையம் திறந்து வைக்கப்பட்டது முதல் நேற்று வரை 3.56 லட்சம் புகார்கள் வரப்பெற்றுள்ளன. இதில் 3.50 லட்சம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. முதல்வரின் உத்தரவு தமிழகத்தில் இருக்கக்கூடிய 3.16 கோடி மின்நுகர்வோருக்கு சிறப்பான சேவையை செய்ய வேண்டும் என்ற சீரிய நோக்கத்தோடு மின்னகத்தை முதல்வர் மக்களுக்கு வழங்கியுள்ளார்.

 கடந்த காலங்களை பொறுத்தவரை மின்வாரியத்திற்கு புகார் தெரிவிக்க வழங்கியிருந்த எண்களின் எண்ணிக்கை லேண்ட்லைன் முதல் செல்போன் வரை என 107 ஆகும். இதையெல்லாம் ஒரே எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுடைய குறைகளை, புகார்களை மின்வாரியத்திற்கு தெரிவித்து அதன் மூலம் தீர்வு காண வேண்டும் என்று தமிழக முதல்வர் மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கக்கூடிய வகையில் மின்னகம் மின்நுகர்வோர் சேவை மையத்தை திறந்து வைத்துள்ளார். மின்னகம் திறந்து வைக்கப்பட்டு இன்று 100வது நாள். மின்னகம் திறந்து வைக்கப்பட்டது முதல் நேற்று வரை 3.56 லட்சம் புகார்கள்  வரப்பெற்றுள்ளன. இதில் 3.50 லட்சத்திற்கும் மேற்பட்ட புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. மொத்த புகார்களில் 99% அளவிற்கு தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன.

மின்வாரியத்தை பொறுத்தவரை முதல்வரின் உத்தரவின் அடிப்படையில் மிகச்சிறப்பாக மின்வாரியத்தின் அதிகாரிகள், அலுவலர்கள் பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.  இன்னும் தொடர் நடவடிக்கையாக நம்முடைய மின்தேவையை பூர்த்தி செய்யக்கூடிய அளவிற்கு மின்உற்பத்தியிலும் சரி, மின்நுகர்வோருக்கு சிறப்பான சேவைகளை வழங்கும் வகையில் செயல்பாடுகள் அமையும். அந்த அடிப்படையில் தான் மின்உற்பத்திக்கு தேவையான திட்டங்களை நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு அறிவுப்புகள் வெளியிடப்பட்டன. கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காவும் பல்வேறு அறிவுப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இன்னும் குறிப்பாக தமிழக அரசின் வரலாற்றில் இல்லாத வகையில் ஒரே ஆண்டில் விவசாயிகளுக்கு 1 லட்சம் இலவச மின்இணைப்புகள் வழங்கும் சிறப்பு வாய்ந்த திட்டத்தினையும் முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். இப்பணிகள் மார்ச் மாதத்திற்குள் சிறப்பாக நிறைவேற்றி, சிறப்பாக செயல்படும். கடந்த ஆட்சியில் 9 மாதங்களாக பராமரிப்பு பணிகள் செய்யப்படாத நிலையில், 10 நாட்களில் 2.72 லட்சம் பணிகள் முடிக்கப்பட்டன. அந்த பணிகளை செய்கின்ற போது பல்வேறு இடங்களில் இருந்த நிலைகளை ஊழியர்கள் உணர்ந்து எங்கெல்லாம் குறைந்த மின்னழுத்தம் இருக்கிறதோ அவை கணக்கெடுக்கப்பட்டு 8,905 மின்மாற்றிகள் கண்டறியப்பட்டது. இப்பணிகள் முதல்வரால் கொளத்தூரில் தொடங்கிவைக்கப்பட்டது. நேற்று வரை 2 ஆயிரம் மின்மாற்றிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. மீதம் இருக்கக்கூடிய பணிகள் விரைவாக முடிக்கப்படும். முதல்வர் 4 மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இக்காலத்திற்குள் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: