மேக்ஸ்வெல் இன்னிங்ஸ் நம்பமுடியாதது: கேப்டன் விராட் கோஹ்லி பாராட்டு

துபாய்: ஐபிஎல் தொடரில் துபாயில் நேற்றிரவு நடந்த 39வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியில் படிக்கல் டக்அவுட் ஆக கேப்டன் விராட் கோஹ்லி 42 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 51 ரன் எடுத்து அவுட் ஆனார். சிறப்பாக ஆடிய மேக்ஸ்வெல் 37 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 56 ரன் அடித்தார். கர் பாரத் 32, டிவில்லியர்ஸ் 11 ரன்னில் ஆட்டம் இழந்தனர். 20 ஓவரில் பெங்களூரு 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன் எடுத்தது. மும்பை பந்துவீச்சில் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் களம் இறங்கிய மும்பை அணியில் டிகாக் 24, இஷான் கிஷன் 9, சூர்யகுமார் யாதவ் 8, குர்னல் பாண்டியா 5 ரன்னில் வெளியேற கேப்டன் ரோகித் சர்மா 43 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஹர்சல் பட்டேல் 17வது ஓவரின் முதல் பந்தில், ஹர்திக் பாண்டியா (3), 2வது பந்தில், பொல்லார்ட் (7), 3வது பந்தில் ராகுல் சாஹர் (0) ஆகியோரை வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட் சாய்த்தார். பவர் பிளேவில் விக்கெட் இழப்பின்றி 56 ரன் எடுத்த மும்பை பின்னர் அடுத்தடுத்து விக்கெட் இழந்து 18.1 ஓவரில் 111 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் பெங்களூரு 54 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் ஹர்சல் பட்டேல், 4, சாஹல் 3, மேக்ஸ்வெல் 2 விக்கெட் வீழ்த்தினர்.

மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருது பெற்றார். 10வது போட்டியில் 6வது வெற்றியை பெற்ற பெங்களூரு 12 புள்ளியுடன் 3வது இடத்தை தக்க வைத்துள்ளது. 6வது தோல்வியை சந்தித்த மும்பை 7வது இடத்திற்கு தள்ளப்பட்டது. வெற்றிக்கு பின்  விராட்கோஹ்லி கூறியதாவது: நாங்கள் வெற்றிபெற்ற விதம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 2வது ஓவரிலேயே படிக்கல் அவுட் கடினமான தொடக்கமாக இருந்தது. பாரத் சில அற்புதமாக ஷாட் ஆடி என்னிடம் இருந்த அழுத்தத்தை எடுத்தார். மேக்ஸ்வெல் இன்னிங்ஸ் நம்பமுடியாதது. நாங்கள் இன்னும் 20-25 ரன் எடுத்திருக்க வேண்டும். இருப்பினும் 166 ரன் சமமான இலக்கு என நினைத்தேன்.

எங்கள் பந்துவீச்சு வலுவான சிறப்பாக இருந்தது. ஹர்சல் ஒரு அற்புதமான ஓவரை வீசி போட்டியை எங்கள் பக்கம் கொண்டு வந்தார், என்றார். மும்பை கேப்டன் ரோகித்சர்மா கூறுகையில், ஆர்சிபி ஒரு கட்டத்தில் 180 ரன்னுக்கு மேல் எடுக்கும் என நினைத்தேன். ஆனால் அதற்குள் கட்டுப்படுத்தியது அற்புதமான பந்துவீச்சு முயற்சி. எங்கள் பேட்டிங் சிறப்பாக அமைய வில்லை. நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் மீண்டு வரவேண்டும். கடந்த காலத்தில் நாங்கள் அதைச் செய்தோம். இந்த முறை அது நடக்கவில்லை, என்றார்.

பிட்ஸ்... பிட்ஸ்...

* ஹர்சல் பட்டேல் நேற்று ஹாட்ரிக்குடன் 4 விக்கெட் வீழ்த்தினார். இந்த சீசனில் அவர் 23 விக்கெட் எடுத்து பர்பிள் தொப்பியை தக்க வைத்துள்ளார். ஆர்சிபிக்காக ஹாட்ரிக் விக்கெட் எடுத்த 3வது வீரர் ஹர்சல். இதற்கு முன் பிரவின்குமார் (2010), சாமுவேல் பத்ரி (2017) ஹாட்ரிக் விக்கெட் எடுத்துள்ளனர்.

* நேற்று பும்ரா பந்தில் சிக்சர் அடித்த கோஹ்லி டி.20 கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்னை கடந்தார். 314 போட்டிகளில் 298வது இன்னிங்சில் இவர் இந்த மைல்கல்லை எட்டினார். இந்த இலக்கை எட்டிய முதல் இந்திய வீரர், சர்வதேச அளவில் 5வது வீரர் ஆவார்.

* ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக ஒரு சீசனில் 2 போட்டியிலும் மும்பையை பெங்களூரு வீழ்த்தி உள்ளது.

Related Stories: