பாகூர் பகுதியில் 110 மி.மீ மழை

*இரவு முழுவதும் மின்சாரமின்றி தவித்த மக்கள்

*500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

பாகூர் : பாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் பகலில் வெயில் சுட்டெரித்தது. இரவு 11,30 மணி அளவில் பலத்த இடி, மின்னல் காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை அதிகாலை 2.30 மணி வரை நீடித்தது. இதன் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. தாழ்வான பகுதியில் உள்ள நிலங்களில் தண்ணீர் தேங்கியது. வீடு, வீட்டை சுற்றியுள்ள பகுதியிலும், தெருவிலும் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

இந்த நிலையில் பாகூரில் செல்லும் உயர்ரக மின்கம்பம் பழுது ஏற்பட்டதால் நேற்று முன்தினம் மாலையில் சுமார் 3 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது. மேலும், நள்ளிரவு பெய்த மழையால் தொடர்ந்து 8 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் இல்லாமல் தவித்தனர். இதேபோல் குருவிநத்தம், சோரியாங்குப்பம், பரிக்கல்பட்டு, ஆராய்ச்சிகுப்பம், சேலியமேடு, குடியிருப்புபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரமின்றி இரவு முழுக்க தூங்க முடியாமல் தவித்தனர்.

 பொதுப்பணித்துறை கணக்கெடுப்பின்படி பாகூர் பகுதியில் நேற்று முன்தினம் ஒரே இரவில் 110 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளது என தெரிவிக்கின்றனர். சித்திரை சம்பா சொர்ணவாரி பயிர் அறுவடை நிலையிலிருந்த நிலையில் திடீர் மழையால் சுமார் 500 ஏக்கருக்கு மேல் நெற்பயிர் சேதமடைந்தன. பல இடங்களில் அறுவடை செய்து களத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து வீணாயின. 3 மாதங்களாக நடவு நட்டு பாதுகாத்து வந்த நெல் பயிர்கள் அறுவடை நேரத்தில் வீணாகி போனதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Related Stories: