குடோனில் பதுக்கி வைத்து சில்லரை விலைக்கு விற்பனை; மறைமலைநகரில் ரூ1 கோடி குட்கா சிக்கியது

* 6 பேர் கும்பல் கைது

* 4 கார், 4 பைக், செல்போன் பறிமுதல்

செங்கல்பட்டு: மறைமலைநகரில் குடோனில் பதுக்கி வைத்து சில்லரை விலைக்கு விற்பதற்காக வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 6 பேர் கும்பல் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 4 கார், 4 பைக், 6 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மறைமலைநகர் அடுத்த காட்டூர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் குட்கா போதை பொருட்கள் பதுக்கி வைத்து சில்லரை விலையில் விற்பனை செய்யப்படுவதாக மறைமலைநகர் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட எஸ்பி விஜயகுமார், வண்டலூர் டிஎஸ்பி அனுமந்தன், இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

போலீசாரை பார்த்ததும் 6 பேர் கும்பல் தப்பி ஓட முயன்றது. அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர்கள், பெங்களூரை சேர்ந்த ஆனந்த் (35), மகேஷ் (25), ராஜஸ்தானை சேர்ந்த தாமோதரன் (22), நரேஷ்குமார் (20), காஞ்சிபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (30), மாரிமுத்து (21) என்பது தெரிந்தது. குடோனில் சோதனை செய்தபோது, பெட்டி பெட்டியாக குட்கா பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. மொத்தம் ரூ.1 கோடி மதிப்புடைய 30 டன் குட்கா இருந்தது. அவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த போதை பொருட்கள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 4 கார்கள், 4 இரு சக்கர வாகனம், 6 செல்போன் மற்றும் ரூ.50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. 6 மாதங்களாக குடோனை வாடகைக்கு எடுத்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களில் விற்பனை செய்து வந்துள்ளனர் என்பதும் ஸ்டவ் ரிப்பேர் சரி செய்வது போன்று போதை பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: