ஆந்திராவில் பரபரப்பு அரசு மருத்துவமனையில் பச்சிளம் பெண் குழந்தை கடத்தல்-சிசிடிவியில் பதிவான பெண்ணுக்கு வலை

திருமலை : ஆந்திராவில் அரசு மருத்துவமனையில் இருந்து பச்சிளம் பெண் குழந்தையை கடத்திய பெண்ணை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், மசூலிப்பட்டனம் அரசு மருத்துவமனையில்  இந்துஜா(29) என்ற பெண் பிரசவத்திற்காக கடந்த 20ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினம் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் மருத்துவமனையில் இந்துஜா தனியாக இருந்தார். அப்போது மருத்துவமனைக்கு வந்த பெண் ஒருவர், ‘நான் உனது கணவரின் உறவினர்’ எனக்கூறிக்கொண்டு இந்துஜாவிடம் அறிமுகம் செய்து கொண்டு அவருடன் இருந்தார்.இந்நிலையில், தடுப்பூசி போடுவதற்காக மருத்துவர்கள் அழைத்ததன்பேரில் இந்துஜா தடுப்பூசி போட சென்றார். இதற்காக, கணவரின் உறவினர் எனக்கூறிய அந்த பெண்ணிடம் தனது குழந்தையை கொடுத்தார். பின்னர், ஊசி போட்டுக்கொண்டு இந்துஜா வந்து பார்த்தபோது அங்கிருந்த பெண், குழந்தையுடன் காணாததால் அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து, மருத்துவமனை முழுவதும் குழந்தையை தேடி பார்த்தார். ஆனால், கிடைக்கவில்லை. குழந்தையை அடையாளம் தெரியாத பெண் கடத்தி சென்றது தெரிந்தது.

இதுகுறித்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில், பதிவான காட்சிகளை வைத்து குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பிறந்து 6 நாட்களே ஆன குழந்தை கடத்தி செல்லப்பட்ட சம்பவம் மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: