அறம் பிறழாது செய்தி வெளியிடுவதே சி.பா.ஆதித்தனாரை போற்றுவதாகும் : முதல்வர் ஸ்டாலின் ட்வீட்!!

சென்னை : அறம் பிறழாது செய்தி வெளியிடுவதே சி.பா.ஆதித்தனாரை போற்றுவதாகும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சி.பா.ஆதித்தனாரின் 117வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ் இதழியலின் முன்னோடியும், தமிழர் தந்தை என எல்லோராலும் அழைக்கப்படும் சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சி.பா.ஆதித்தனார் 117-வது பிறந்த நாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கீதாஜீவன், சாமிநாதன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ் இதழியலின் முன்னேர் சி.பா.ஆதித்தனார் அவர்களின் 117-ஆவது பிறந்தநாள்! தினத்தந்தி தொடங்கி எளிய மக்களுக்கு எழுத்தறிவித்து உலக நடப்புகளை அறியத்தந்த அவர்; கழக அரசில் பேரவைத் தலைவராகவும் அமைச்சராகவும் திறம்படச் செயலாற்றியவர். அறம் பிறழாது செய்தி வெளியிடுவதே அவரைப் போற்றுவதாகும்!” என்று பதிவிட்டுள்ளார்.

சி.பா.ஆதித்தனார் 117-வது பிறந்த நாளையொட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை ஆகியோர் அவரை நினைவுகூர்ந்துள்ளனர். அதேபோல் ‘நாம் தமிழர்’ கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை, எழும்பூரில் அமைந்துள்ள சி.பா.ஆதித்தனாரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினார்.

Related Stories: