தஞ்சை மாவட்டத்தில் 21 கிராமங்களில் 100 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்-அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தஞ்சை : தஞ்சை மாவட்டத்தில் 21 கிராமங்களில் 100 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் ஊராட்சி ஒன்றியம், தஞ்சாவூர் மாநகராட்சி, மணகரம்பை ஊராட்சி மற்றும் திருவிடைமருதூர் பேரூராட்சி ஆகிய இடங்களில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் நடைபெற்று வரும் மூன்றாவது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், அரசு தலைமை கொறடா கோவி.செழியன், தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் , மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் பார்வையிட்டனர்.

தஞ்சாவூர் அருகே மொன்னையம்பட்டியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் தமிழகம் தன்னிறைவு பெற்று வருகிறது. கடந்த 12ம் தேதி 40 ஆயிரம் முகாம்களில், 20 லட்சம் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டு, 28.91 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து 19ம் தேதி 20 ஆயிரம் முகாம்களில் 15 லட்சம் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டு, 16.43 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி முகாம்களில் முதல்வர் நேரடியாக ஆய்வு செய்ததற்கு பிறகு, மக்கள் மத்தியில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள விழிப்புணர்வு ஏற்பட்டது.

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியுள்ள 1 லட்சத்து 10 ஆயிரத்து 971 மாணவ, மாணவிகளின் மன அழுத்ததை போக்கும் விதமாக, 333 மனநல ஆலோசகர்களை கொண்டு போன் மூலம், இதுவரை 80 சதவீதம் பேருக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கும் பணி நடந்து வருகிறது. இதில் 200 மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலில் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தொடர்ந்து கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மூன்று உயிர்களை இழந்துள்ளோம் என்ற நிலையில், தமிழகத்தில் இது போன்ற நடக்காது.

தமிழகத்தில் இதுவரை 4.43 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் 5 கோடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 500க்கும் அதிகமான கிராமங்களில் நூறு சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 21 கிராமங்களில் 100 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். கடந்த ஜனவரி 16ம் தேதி, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் இருந்த போது, தடுப்பூசியை மத்திய அரசு அதிகளவில் வழங்க தயாராக இருந்தது. ஆனால் தடுப்பூசி போடுவதற்கான விழிப்புணர்வை போதுமான அளவு கடந்த ஆட்சியில் ஏற்படுத்த நிலையில், தினசரி சராசரியாக நாளொன்றுக்கு 61 ஆயிரம் தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தி உள்ளனர். 103 நாட்களில் 63 லட்சம் தடுப்பூசிகள் தான் போடப்பட்டுள்ளது.

தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு நாள் ஒன்றுக்கு சுமார் 2.52 லட்சம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் வேண்டும் என முதல்வர், பிரதமருக்கு கடிதம் அளித்துள்ளார். அதன்படி அடுத்த வாரம் 50 லட்சம் தடுப்பூசிகள் வரப் பெற்றால், அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் மாபெரும் முகாம் நடத்தப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை இயக்குனர் செல்வநாயகம், கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா., கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) காந்த்., சட்டமன்ற உறுப்பினர்கள் டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்), துரை.சந்திரசேகரன் (திருவையாறு), அண்ணாதுரை (பட்டுக்கோட்டை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கும்பகோணம்; கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் தனியார் திருமண மண்டபத்தில் மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. திருவிடைமருதூர் தொகுதியில் மட்டும் 60 பூத்களில் மொத்தம் 7000 டோஸ் 1200 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பார்வையிட்டார். மேலும் உடல்நிலை சரியில்லாத நிலையில் மருத்துவமனைக்கு வர முடியாத ஊனமுற்றோர் மற்றும் முதியோர்களுக்கு பயன்படும் வகையில் வீடு தேடி சென்று மருந்துகள் வழங்க மக்களை தேடி மருத்துவ முகாம் என்ற முகாமை தொடங்கி வைத்தார்.

இந்த முகாமில் திருவிடைமருதூர் அருகே கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 100 சதவீதம் இலக்கை நிறைவு செய்த போழக்குடி, சிறுமூலை, கொண்டசமுத்திரம், செருகடம்பூர் உள்ளிட்ட 10 ஊராட்சிகளின் தலைவர்களுக்கு பாராட்டி கேடயங்களை வழங்கினார். மேலும், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 10 நபர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கினார்.

திருவையாறு: திருவையாறு அரசர் கல்லூரில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் நடுக்காவேரி அரசு மருத்துவமனை மருத்துவர் அருணா தடுப்பூசி முகாமை பொதுமக்களுக்கு போட்டு தொடங்கி வைத்தார். இதில் வட்டார சுகாதார மேற்பார்யாளர் சதாசிவம், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா, சுகாதார ஆய்வாளர் சுந்தா ஆகியோர் கலந்து கொண்டனர். திருவையாறு ஒன்றியத்தில் 49 மையங்களில் 4500 பேர் கலந்து கொண்டு கொரோனா முதல் மற்றும் இரண்டாம் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

Related Stories: