குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி முதல் மரப்பாலம் வரை சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்-மண் தூசு பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதி

ஊட்டி : குன்னூர்  - மேட்டுபாளையம் சாலையில் காட்டேரி முதல் மரப்பாலம் வரை பல இடங்களில் சாலை  விரிவாக்கம் செய்யப்பட்டு தடுப்புசுவர் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று  வருகிறது. நீலகிரி மாவட்டத்தை மற்ற மாவட்டங்களுடன் இணைக்க கூடிய  முதன்மையான சாலையாக கூடலூர் - ஊட்டி - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை  உள்ளது. சுற்றுலா நகரமாக ஊட்டிக்கு, கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து வர  கூடிய சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாகவும், தமிழகத்தின் பிற பகுதிகளில்  இருந்து வர கூடிய சுற்றுலா பயணிகள் மேட்டுபாளையம், குன்னூர் வழியாகவும் வருகின்றனர். இதனால், இந்த சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருக்கும்.

வாகனங்கள் அதிகாிப்பு காரணமாகவும், சீசன் சமயங்களில்  ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஊட்டிக்கு வருவதாலும் இந்த சாலையில் கடும்  போக்குவரத்து நெரிசல் ஏற்படுது. நெரிசலை குறைக்கும் நோக்கில் இந்த சாலையில் பல இடங்களில் கடந்த இரு  ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்புசுவர் கட்டுதல், பாலம் அமைத்தல், விரிவாக்கம்  செய்தல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் தேசிய நெடுஞ்சாலைத்துறை  சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே, ஊட்டி நகரில் தலையாட்டிமந்து  முதல் சேரிங்கிராஸ் வரை சாலையோர கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள்  நடைபெற்று வருகின்றன. இதேபோல், குன்னூர் - மேட்டுபாளையம் இடையே காட்டேரி  முதல் மரப்பாலம் வரை பல இடங்களில் சாலை குறுகலாக உள்ளது. இதனை  தொடர்ந்து, இப்பகுதிகளில் பக்கவாட்டு பகுதிகளில் மண் திட்டு இடிக்கப்பட்டு  விரிவாக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து தடுப்புசுவர் கட்டும் பணிகள் துரித  கதியில் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, சாலை விரிவாக்க பணிகளுக்காக மண்  திட்டுகள் இடிக்கப்பட்டு சாலையோரம் கொட்டப்பட்டுள்ளன. இவற்றின் மீது  வாகனங்கள் சென்று வரும் போது தூசி பறக்கின்றன.

 இதனால், வாகனங்களில்  சென்று வரும், குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் கண்களில் தூசி விழுந்து  பாதிப்படைகின்றனர்.எனவே தூசி எழாத வதையில் தண்ணீர் தெளித்த பின் பணிகளை  மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: