அனைத்து குடிமக்களுக்கும் சுகாதார அடையாள அட்டை வழங்கும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!!

டெல்லி : நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் சுகாதார அடையாள அட்டை வழங்கும் வகையிலான ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி வாயிலாக தொடக்கி வைத்தார். கடந்த மாதம் 15ம் தேதி செங்கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் சோதனை முறையில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். அதன்படி தற்போது 6 யூனியன் பிரதேசங்களில் இது சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து காணொளி மூலம் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நாடு முழுமைக்குமான ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை தொடங்கி வைத்தார். ஆயுஷ்மான் பாரத் மக்கள் ஆரோக்கிய திட்டம் தொடங்கப்பட்டு 3வது ஆண்டு கொண்டாடப்படும் நிலையில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி குடிமக்களின் சுகாதார விவரங்களை உள்ளடக்கிய அடையாள அட்டை வழங்கப்படும்.

சுகாதார கணக்கு என்ற அடிப்படையில் இதனை மொபைல் செயலி மூலம் அறிந்து கொள்ள முடியும். இதில் நவீன மற்றும் பாரம்பரிய மருத்துவ முறையிலான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: