ஆந்திரா-ஒடிசா இடையே கரையை கடந்தது குலாப் புயல் : அதிகாலையில் வலுவிழந்தது!... தெலங்கானாவிலும் கனமழை எச்சரிக்கை!!

ஹைதராபாத் : வங்கக் கடலில் உருவான குலாப் புயல் நேற்று இரவு ஆந்திரா- ஒடிசா இடையே கரையைக் கடந்தது. குலாப் புயல் கரையை கடந்துவிட்டாலும் ஆந்திரா,தெலங்கானா, ஒடிசா மாநிலங்களின் கடலோர பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. கிழக்கு மத்திய வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இக்காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து புயலாக உருவானது.குலாப் என பெயரிடப்பட்ட இந்த புயல், வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கரையை ஒட்டிய பகுதிகளான விசாகப்பட்டினம் , கோபால்பூர் இடையே நேற்று இரவு கரையை கடந்தது.

அப்போது மணிக்கு 95 கி.மீ. வேகத்தில் வீசிய சூறைக்காற்றால் மரங்கள், மின்கம்பங்கள் வேருடன் பிடித்து எறியப்பட்டன. குடிசை வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன. கொந்தளிப்புடன் காணப்பட்ட அலைகள் மீனவர்கள் கிராமங்களுக்குள் புகுந்தது. குலாப் புயல் எதிரொலியால் ஆந்திராவின் கலிங்கபட்டினம் சுற்றுவட்டார பகுதிகளில் வசித்து வந்த ஆயிரக்கணக்கானவர்கள் மாற்றப்பட்டனர். எச்சரிக்கையை மீறி கடலில் மீன்பிடிக்கச் சென்ற ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதி மீனவர்கள் 6 பேர் படகு கவிழ்ந்ததால் நீரில் மூழ்கினர். இதில் 2 மீனவர்கள் உயிரிழந்துவிட்டனர். இந்தநிலையில் தெலங்கானா மாநிலம் முழுவதுமாக அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   

புயல் கரையை கடந்த போது இரு மாநிலங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.இந்த புயலானது இன்று அதிகாலை 2.30 மணிக்கு வலுவிழந்து ஆழ்ந்த் தாழ்வு நிலையாக வடக்கு ஆந்திரா கடற்பரப்பில் நிலை கொண்டுள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆந்திராவை ஒட்டிய ஒடிசா மாநில மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Related Stories: