தைரியமாக இருங்கள்!: இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த சேலம் சிறுமியின் மருத்துவ சிகிச்சைக்கு உதவி கரம் நீட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த சேலம் சிறுமியின் மருத்துவ சிகிச்சைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதவி செய்வதாக தெரிவித்துள்ளார். அப்போது அவர் தைரியமாக இருக்குமாறு சிறுமியின் தாயாருக்கு  செல்போனில் ஆறுதல் கூறியுள்ளார். சேலம் அரிசிப்பாளையத்தை சேர்ந்த விஜயகுமார், ராஜநந்தினி தம்பதியின் 14 வயது மகள் ஜனனி. கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓட பேசும் இந்த வீடியோ, கல் நெஞ்சையும் கரைக்கக்கூடியது. 2 சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்ட நிலையில் உயிருக்கு போராடும் இந்த சிறுமியை தந்தை கைவிட்டுவிட்டார்.

ஆனால் பெற்ற மனம் மட்டும் கொஞ்சமும் தளராமல் சிறுமியை காப்பாற்ற போராடி கொண்டிருக்கிறது. பெற்றோருக்கு போதிய வருமானம் இல்லாததால் சிகிச்சைக்கு உதவுமாறு சிறுமி  உதவி வேண்டி பேசும் வீடியோ முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பார்வையில் பட உடனே செயலில் இறங்கிய அவர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை தொடர்புகொண்டு சிறுமிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துகொடுக்குமாறு அறிவுறுத்தினார். அதன்படி சிறுமிக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அங்கு சிகிச்சை பெறும் சிறுமி ஜனனியையும் அவரது தாயாரையும் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தைரியமாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். முதலமைச்சரே நேரடியாக பேசியது சிறுமியின் அச்சத்தை போக்கி தைரியமூட்டி எதிர்காலம் குறித்த நம்பிக்கையை அவருக்கு விதித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியபடி மக்கள் நல்வாழ்வுத்துறையிடம் இருந்து விரைவில் அழைப்பு வரும். தேவையான மருத்துவ உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் சிறுமி ஜனனி காத்துக் கொண்டிருக்கிறாள்.

Related Stories:

>