ஊரக தேர்தல் அலுவலக திறப்பு விழாவில் அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்: அமைச்சர் சேகர் பாபு பேட்டி

மதுராந்தகம்: ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில் நூற்றுக்கு நூறு சதவீதம் அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என, உள்ளாட்சித் தேர்தல் அலுவலக திறப்பு நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு  தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கானஅலுவலகங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் பள்ளிபேட்டை ஊராட்சியில் நடைபெற்ற அலுவலக திறப்பு நிகழ்ச்சியில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து  எல்.எண்டத்தூர் பகுதியில் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார். அப்போது, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர், காஞ்சிபுரம் எம்பி செல்வம், ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், தம்பு, மாவட்ட பொருளாளர் கோகுலக்கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர், அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டமன்ற தேர்தலில் அறிவித்த 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் 212 வாக்குறுதிகளை நான்கே மாதத்தில் முதல்வர் நிறைவேற்றியுள்ளார். திமுக பொருத்தவரை செய்வதைச் சொல்வோம் சொல்வதைத்தான் செய்வோம் அதுபோல அறநிலை துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு யார் செய்து இருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் பாரபட்சம் காட்ட மாட்டோம். கடவுள் சொத்து கடவுளுக்கே என்பதை உணர்த்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்போம் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற அனைவரும் நூற்றுக்கு நூறு சதவீதம் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவார்கள். தற்பொழுது, அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர்களில் மூன்று பேர் திமுக தலைவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதுவே, இந்த தேர்தலுக்கு ஒரு உதாரணமாக இருக்கும். முதல் வெற்றி முற்றிலும் வெற்றி என்பது போல் இக்கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: