சட்டம் நமக்கானது!

நன்றி குங்குமம் தோழி

தமிழரின் தற்காப்புக் கலையாக மட்டுமின்றி, வீர விளையாட்டுமான சிலம்பம் தற்போது வீடியோ கேம்ஸ்களாக உருமாறி நிற்கிறது. மனதுக்கும் உடலுக்கும் வலுவேற்றும் இக்கலையை தேடிப்பிடித்து கற்க வேண்டிய நிலை ஏற்பட்டது இந்த நூற்றாண்டின் சோகம். அந்த சோகம் உங்களுக்கு வேண்டாம் என்று கடந்த ஏழு ஆண்டுகளாகத் தனது பகுதியைச் சுற்றி இருக்கும் குழந்தைகளுக்கும், தான் படித்த பள்ளியிலும் இலவசமாகச் சிலம்பம் கற்றுக் கொடுத்து வருகிறார் கோவையைச் சேர்ந்த பவித்ரா பிரியா.

“கோவை சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறேன். அரசுப் பள்ளி ஆசிரியையாக இருக்கும் அம்மாவோடு அவங்க பள்ளிக்குச் சிறு வயதில் ஒரு முறை சென்றிருந்தேன். அங்கு மற்ற ஆசிரியர் ஒருவரின் மகன் சிலம்பம் சுற்றிக் காண்பித்ததைக் கண்டு, என்னையும் இதில் சேர்த்துவிட அம்மாகிட்ட கேட்டேன். இதற்கு முன் குங்பூ கற்றிருந்ததால் இது போன்ற மார்ஷியல் ஆர்ட்ஸ் மீது அலாதி ஈடுபாடு எனக்கும், தம்பிக்கும் இருந்தது. ஏழு வயதிலிருந்து, அங்கப்பன் மாஸ்டரிடம் சிலம்பம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். 11ஆம் வகுப்பு படிக்கும் போது பக்கத்திலிருக்கும் குழந்தைகளுக்கு, நானும் தம்பியும் இணைந்து இலவசமாக  கற்றுக்கொடுக்க ஆரம்பித்தோம்” என்று கூறும் பவித்ரா பல உலக சாம்பியன்ஷிப் போட்டிகள், உள்ளூர் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றிருக்கிறார்.

“2017ஆம் ஆண்டு தெற்காசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு பதக்கம் வென்றேன். இதில் மலேசியா, பங்களாதேஷ், கம்போடியா போன்ற நாடுகளிலிருந்து பங்கு பெற்றனர். இவர்களுக்கு நம்மூரிலிருந்து போய் கற்றுக் கொடுக்கின்றனர். இது போக அவர்களும் வீடியோக்கள் பார்த்து கற்றுக் கொள்கின்றனர். நம்ம ஊர் பாரம்பரிய கலையான சிலம்பத்திற்கு ஈரானில் பெரிய குழுவே உள்ளது. இத்தாலி, ஸ்பெயின் என உலக நாடுகளிலும் பரவலாக தற்போது சிலம்பத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இதில் பலர் இந்தியா வந்து கற்றுச் செல்கின்றனர். தமிழகத்திலிருந்து பல ஆசிரியர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கற்றுக் கொடுக்கின்றனர்.

சிலம்ப கலைக்கு நம்மை விட டில்லியில் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். தொடர்ந்து பள்ளிகளிலும், தேசிய அளவிலும் போட்டிகள் நடத்துகிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை முன்பிருந்ததை விட தற்போது அதிக விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதிகமானோர் சிலம்பம் கற்றுக் கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். இருந்தாலும் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதில் இன்றளவும் தொய்வாகத்தான் இருக்கிறது” என்றார். “மற்ற மார்ஷியல் கலைகளுக்கு எல்லாம் சிலம்பக் கலை தான் தாய்” என்று கூறும் பவித்ரா, அதற்கெல்லாம் கொடுக்கும் முக்கியத்துவம் சிலம்பத்திற்குத் தருவதில்லை என்கிறார். சிலம்பம், குங்பூ, வியட்நாமின் மார்ஷியல் கலையான வொக்கோச்சியன் எனப் பல கலைகளை கற்றிருக்கிறார் பவித்ரா.

வியட்நாமில் நடைபெற்ற வொக்கோச்சியன் போட்டியில் வெள்ளி, பிரான் பதக்கங்களையும் வென்றுள்ளார். சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்பம் போட்டியில் இவரது மாணவர்கள் 18 பேர் பதக்கங்களை பெற்றுள்ளனர். சிலம்ப கலையை இலவசமாக கற்றுக் கொடுப்பதற்கான காரணத்தை முன் வைக்கும் பவித்ரா, “இந்த கலைக்கு விலை வைக்க முடியாது. அதுதான் உண்மை. என்ன விலை கொடுத்தாலும் இதற்கு பத்தாது. குரு என்கிற ஸ்தானம் மட்டும்தான். என்னிடம் ரெகுலராக 100 பேர் கற்றுக் கொள்கிறார்கள். இவர்களைத் தவிர நான் படித்த பள்ளியில் 500க்கும் மேற்பட்டோர் கற்கிறார்கள்.

இதை ஒரு கலையாகவும், விளையாட்டாகவும் மட்டுமின்றி அவர்களது படிப்பிலும் இது எப்படி முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைச் சொல்லித் தருகிறோம். வெறும் சிலம்பம் மட்டுமின்றி  வாழ்வின் நெறி முறைகளும் எங்களுக்குத் தெரிந்த அளவு கற்றுக் கொடுக்கிறோம். அரசு நடத்தக் கூடிய அனைத்துப் போட்டிகளிலும் என் மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெற்று வருகிறார்கள். ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் அரசு வேலை பெறவும் ஏற்பாடு செய்கிறோம்” என்றவர் சட்டப் படிப்பின் மீதுள்ள ஆர்வத்தை பகிர்ந்தார்.

‘‘சட்டம் படிக்கச் சிறு வயதிலிருந்தே ஆசை. மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாத துறை. பிரச்சினைகளை எதிர்கொள்ள வித்தியாசமான வழிகளைத்தான் பார்க்கிறார்கள். உரிமைகளை காக்கத்தான் சட்டமிருக்கிறது என்று நிறைய பேருக்குத் தெரிவதில்லை. இந்த டெக்னாலஜி உலகில், அதனோடு புழங்குவதை விட மக்களோடு சேர்ந்திருக்க தான் பிடித்திருக்கிறது. பொருளாதார காரணங்களால் வழக்கு நடத்த முடியாமல் நம்பி வருபவர்களுக்கு என்னால் முடிந்தளவு இலவசமாக நடத்துவேன்.  

 

ஓர் இடத்தில் எதற்கெல்லாம் கேள்வி கேட்கலாம், எவ்வளவு தூரம் நமக்கான உரிமைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளாமல் பலர் நிறைய இழக்கிறார்கள். சட்டம், காவல் துறை போன்றவற்றைப் பார்க்கக் கூடாத இடமாக ஓர் அச்சத்தோடு பார்க்கிறார்கள். இது அவர்களுக்கானது என்பது தெரியவில்லை. இந்த பயம் தேவையில்லாதது. பயம் போனால் மக்கள் சுதந்திரமாக இருப்பார்கள்” என்றார் பவித்ரா பிரியா.

தொகுப்பு: அன்னம் அரசு

Related Stories: