காஞ்சிபுரம் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் களத்தில் 7036 வேட்பாளர்கள்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் உள்ள 2321 பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாளான செப்.22 மாலை 5 மணிவரை மொத்தம் 8603 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையில்  91 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 8512 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கு கடைசி நாளான நேற்று மாலை 1327 வேட்பாளர்கள் வாபஸ் பெற்றனர். 149 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் காஞ்சிபுரம் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் களத்தில் 7036 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் அக்.6ம் தேதி 3 ஒன்றியங்களிலும், அக்.9 ம் தேதி 2 ஒன்றியங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

வேட்புமனு தாக்கல் செப்.15ம் தேதி தொடங்கியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராம வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் என மொத்தம் 2321 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் செப்.22ம் தேதி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இதில் இறுதியாக 11 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு 64 வேட்பாளர்களும், 98 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு 384 வேட்பாளர்களும், 274 கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு 922 வேட்பாளர்களும், 1938 கிராம ஊராட்சிக்குழு உறுப்பினர்களுக்கு 5666 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். 145 கிராம ஊராட்சிக்குழு உறுப்பினர்களும், 4 கிராம பஞ்சாயத்து தலைவர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>