வேறு ஒருவருடன் மனைவி தொடர்பை கைவிடாததால் மகன், மகளை கொன்று வீடியோ எடுத்து அனுப்பிவிட்டு தற்கொலை செய்த கணவன்: சங்ககிரி பை-பாஸ் சாலையோரம் பயங்கரம்

சேலம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா மங்களப்பட்டியை சேர்ந்தவர் முருகன் (33), இவர், சேலம் மாவட்டம் சங்ககிரியில் குப்பனூர் பை-பாஸ் சாலையில் உள்ள ஒரு தாபா ஓட்டலில் கடந்த 13 ஆண்டுகளாக சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். ஓட்டல் அருகே மனைவி முருகேஸ்வரி, மகன் சீனிவாசன் (9), மகள் கிருஷ்ணபிரியா (6) ஆகியோருடன் வசித்தார். முருகேஸ்வரியும் சில ஆண்டுகளாக அதே ஓட்டலுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வேலை பார்க்கும் ஊழியர் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த முருகன், மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், அந்த நபருடன் உள்ள தொடர்பை கைவிடவில்லை. இதனால், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் முருகன், நேற்று முன்தினம் மாலை மகன் சீனிவாசன், மகள் கிருஷ்ணபிரியா ஆகியோருடன் காய்கறி வாங்கி வருகிறேன் எனக்கூறி விட்டு சென்றுள்ளார். பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை. முருகேஸ்வரி தீவிரமாக தேடியுள்ளார். சங்ககிரி போலீசிலும் புகார் தெரிவித்தார். போலீசாரும் தேடி வந்தனர். இதனிடையே இரவில், முருகனின் செல்போனில் இருந்து அவரது உறவினர்களுக்கு ஒரு வீடியோ வந்துள்ளது. அதில், மகன் சீனிவாசன் ஒரு மரத்தில் தூக்கில் தொங்குவது போலவும், மகள் கிருஷ்ணபிரியா தரையில் சடலமாக கிடப்பதையும் காட்டி, ”இதற்குத்தானே ஆசைப்பட்டீங்க, எங்கள கொல்லணும்னு முடிவு பண்ணீங்க, கொன்னுட்டீங்க. இந்தா பாத்துக்கோங்க,’’ என முருகன் பேசியுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்து பதறிய உறவினர்கள், சங்ககிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். அதில், நேற்று மாலை, சங்ககிரி பை-பாஸ் சாலையில் தனியார் திருமண மண்டபத்தின் எதிரே ஒரு தோட்டத்தில் உள்ள மாமரத்தில் முருகன், சீனிவாசன் ஆகியோர் தூக்கில் தொங்கிய நிலையிலும், சிறுமி கிருஷ்ணபிரியா கீழேயும் சடலமாக கிடந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் மனைவி கள்ளத்தொடர்பை கைவிடாததால், இரு குழந்தைகளையும் கொன்று விட்டு, அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது.

Related Stories:

>