கோவையில் பயிற்சிக்கு வந்தவர்கள் பெண் அதிகாரி பலாத்காரம் விமான படை அதிகாரி கைது

கோவை: கோவையில் பயிற்சிக்கு வந்த விமான படை பெண் அதிகாரியை பலாத்காரம் செய்தது தொடர்பாக, அதிகாரி கைது செய்யப்பட்டார். கோவை ரெட்பீல்டில் விமான படை பயிற்சிக் கல்லூரி உள்ளது. இங்கு டெல்லியை சேர்ந்த 28 வயது பெண் அதிகாரி மற்றும் சில அதிகாரிகள் கடந்த சில நாட்களாக பயிற்சி பெற்று வந்தனர். பெண் அதிகாரி மைதானத்தில் கூடைப்பந்து விளையாடி கொண்டிருந்த போது அவரது காலில் காயம் ஏற்பட்டது. நடக்க முடியாமல் சிரமப்பட்ட அவர், விமான படை அலுவலகத்தில் உள்ள தனது அறைக்கு சென்றார். அங்கே வலி நிவாரண மாத்திரை சாப்பிட்ட அவர், சிறிது நேரத்தில் தூங்கி விட்டார். பின்னர், எழுந்து பார்த்த போது அவரது ஆடை களையப்பட்டிருந்தது.

அவரை அங்கு பயிற்சிக்காக வந்திருந்த சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த அதிகாரி அமித்தேஸ் (30) என்பவர் பலாத்காரம் செய்து விட்டதாக தெரிகிறது. அமித்தேஸ் விமான படை அலுவலகத்தில் நடந்த விருந்தில் பங்கேற்றபோது, பெண் அதிகாரியுடன் பேசியுள்ளார். பின்னர் அவர் அறைக்கு செல்வதை அறிந்து பின் தொடர்ந்து சென்றுள்ளார். பெண் அதிகாரி கதவை உட்புறமாக தாழிட மறந்து விட்டதாக தெரிகிறது. அப்போது நைசாக உள்ளே புகுந்த அமித்தேஸ், அவரை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த பெண் அதிகாரி, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோரை சந்தித்து புகார் அளித்தார்.

இதையடுத்து கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், அமித்தேஸ் கைது செய்யப்பட்டு நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, விமான படை அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்க போலீசுக்கு அதிகாரமில்லை என அமித்தேஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இது தொடர்பாக விசாரித்த நீதிபதி, ஒரு நாள் மட்டும் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அமித்தேஸ் உடுமலையில் உள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories:

>