சென்னையில் தேர்வானவர்கள் புறக்கணிப்பு உ.பி.யில் தேர்வெழுதியவர்கள் சென்னையில் பணி நியமனம்: ரயில்வே நிர்வாகத்துக்கு மதுரை எம்.பி எச்சரிக்கை

மதுரை: உத்தரப்பிரதேசத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களை சென்னையில் நியமித்து, சென்னையில் தேர்வு செய்யப்பட்டவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்த ரயில்வே நிர்வாகத்தை எதிர்த்து போராட்டத்தில் இறங்குவோம் என்று சு.வெங்கடேசன் எம்பி எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரை மக்களவைத் தொகுதி எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட 54 விண்ணப்பதாரர்களை தெற்கு ரயில்வே உதவி ஓட்டுனர் பணிகளுக்கு நியமித்தும், தெற்கு ரயில்வேயின் சென்னை தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை புறக்கணித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உ.பி. கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட 54 பேரின் மதிப்பெண்கள் தெற்கு ரயில்வேயில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்களை விடக்குறைவு. ரயில்வே பிற மண்டலங்களில் தேர்வு செய்யப்பட்டவர்களை தெற்கு ரயில்வேயில் நியமிப்பது சட்டவிரோதம். ஏற்கனவே டெக்னீசியன் பிரிவில் தெற்கு ரயில்வேக்கு விண்ணப்பித்தவர்களில் 60 சதவீதம் பேர் இந்தியில் தேர்வு எழுதி வந்தவர்கள். இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை  புறக்கணித்து, கோரக்பூர் மண்டலத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களை நியமிப்பது கண்டனத்துக்குரியது. ரயில்வே அமைச்சர் உடனே தலையிட்டு அவர்களை கோரக்பூர் திருப்பி அனுப்ப வேண்டும். தெற்கு ரயில்வே காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை உதவி ஓட்டுனர் காலியிடங்களில் நிரப்பவேண்டும். இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால், நேரடி போராட்டத்தில் இறங்குவோம்.

Related Stories:

>