வெல்டிங் பணியில் பறந்த தீப்பொறி பட்டு பட்டாசு வெடித்து ஒருவர் பலி: 3 பேர் படுகாயம்

அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கொமராயனூரில் தீபன் (32) என்பவரது வீட்டின் முன்பு சிமென்ட் ஷெட் அமைக்கும் பணி நேற்று நடந்தது. இதில் சங்கராப்பாளையம் முருகன் (42), மகன் விமல்நாதன் (24), தம்பி மகன் வெற்றிவேல் (31) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். வெல்டிங் பணியின் போது தீப்பொறி பறந்து வீட்டில் இருந்த பட்டாசுகள் மீது விழுந்ததில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், வெற்றிவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முருகன், விமலானந்தன், வீட்டு உரிமையாளர் தீபனின் மனைவி பிரியா (27) ஆகியோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வெடி விபத்தில் ஒரு கன்றுக் குட்டியும்  உயிரிழந்தது. மேலும் வீட்டின் ஒரு பகுதி இடிந்து சேதமானது. வீட்டு உரிமையாளர் தீபன், புதுவையில் ஓட்டலில் வேலை செய்தபோது அரியாங்குப்பம் பகுதியில் தயாரிக்கப்படும் பட்டாசுகளை வாங்கி வெடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த ஆண்டு தீபாவளிக்கு புதுச்சேரியில் இருந்து பட்டாசுகளை வரவழைத்து வெடித்து விட்டு, மீதி பட்டாசுகளை வீட்டின் ஒரு மூலையில் வைத்துள்ளார். அந்த பட்டாசுகள்தான் வெடித்துச் சிதறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>