தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் விபத்துகளை தடுக்க ரூ.7,270 கோடியில் சிறப்பு திட்டம்: ஒன்றிய அரசு அறிவிப்பு சாதித்தால் சன்மானம்

அமராவதி:  தமிழகம் உள்ளிட்ட14 மாநிலங்களில் சாலை பாதுகாப்பை மேம்படுத்த ரூ.7,270 கோடியில் புதிய திட்டத்தை ஒன்றிய அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. கடந்த 2019ம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 4.49 லட்சம் சாலை விபத்துகளில் 1.51 லட்சம் இறப்புகள் பதிவாகி உள்ளன. மொத்த இறப்புகளில் 85 சதவீதம் தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மபி, கர்நாடகா, உள்ளிட்ட 14 மாநிலங்களில் பதிவாகி உள்ளன.

இந்நிலையில், ‘விபத்தில்லா இந்திய சாலைகள்’ என்ற தொலைநோக்கு பார்வையுடன் சாலை பாதுகாப்புக்காக பிரத்யேகமாக புதிய திட்டம் ஒன்றை கொண்டு வர இருப்பதாக ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. விபத்துகள் அதிகம் நிகழும் தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் 6 ஆண்டுகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.7,270 கோடி நிதி ஒதுக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின்படி, சாலை விபத்துகள் மற்றும் இறப்புகளை தடுக்க, அடிமட்ட பிரச்னைகளில் இருந்து தீர்வுகள் கண்டு பாதுகாப்பை மேம்படுத்தி மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு மானியம் வழங்கும். இதற்காக 11 அம்சங்களை வகுத்து, அவற்றை செயல்படுத்தும் மாநில அரசுகளுக்கு செயல்பாட்டிற்கு ஏற்ப மானியம் வழங்கப்படும். இதற்காக சாலை பாதுகாப்பு பணிகள் ஒவ்வொரு ஆண்டும் தணிக்கை செய்யப்படும்.

உலக வங்கியிடம் கடன் வாங்கப்படும்

* கடந்த 2020ம் ஆண்டில் சாலை இறப்புகள் எண்ணிக்கை 1.32 லட்சமாக பதிவாகி உள்ளது. கொரோனா முழு ஊடரங்கு காரணமாக இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட குறைந்துள்ளது.

* மார்ச் 2027க்குள் சாலை விபத்துகளின் எண்ணிக்கையை 30 சதவீதம் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசு ரூ.3,635 கோடி வழங்கும், உலக வங்கி மற்றும் ஆசிய மேம்பாட்டு வங்கியிலிருந்து தலா ரூ.1,818 கோடி கடனாகப் பெறப்படும்.

* மாநிலங்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு ரூ.6,725 கோடி மானியமாக வழங்கப்படும், மீதமுள்ள ரூ.545 கோடி திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும்.

Related Stories: