பிரதமர் மோடி வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசி போடாத யாரையும் விட்டு விடாதீர்கள்

புதுடெல்லி: ‘கொரோனா தடுப்பூசியை மக்கள் அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்கு தெரிந்தவர்கள் யாருமே இந்த பாதுகாப்பு வளையத்தில் இருந்து விடுபடாமல் இருப்பதை மக்கள் உறுதி செய்ய வேண்டும்,’ என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிறு அன்று அகில இந்திய வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அவர் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்பாக பதிவு செய்யப்பட்ட இம்மாதத்திற்கான மன் கி பாத் நிகழ்ச்சி வானொலியில் நேற்று ஒலிபரப்பப்பட்டது.

அதில் பிரதமர் மோடி பேசியிருப்பதாவது: கொரோனாவுக்கு எதிராக இந்தியா தினம் தினம் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா படைத்து வரும் சாதனைகள், உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகின்றன. கொரோனாவுக்கு எதிரான போரில் ஒவ்வொரு இந்தியனின் பங்களிப்பும் அவசியமானது. யாருமே தடுப்பூசி போடமல் இருக்கக் கூடாது. உங்களுக்கு தெரிந்தவர்கள் யாருமே இந்த பாதுகாப்பு வளையத்தில் விடுபடாமல் இருப்பதையும் நீங்கள் உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசி போட்டாலும், தேவையான பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

பொருளாதாரத்தை சுத்தப்படுத்த தொழில்நுட்பத்தால் உதவ முடியும். அதற்கு உதாரணம் யுபிஐ பணப்பரிவர்த்தனை வசதிதான். கடந்த ஆகஸ்டில் 355 கோடி யுபிஐ டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. சராசரியாக ரூ.6 லட்சம் கோடிக்கு மேல் யுபிஐ மூலம் பண பரிவர்த்தனைகள் நடக்கின்றன. இதன் மூலம் பொருளாதாரம் வெளிப்படையான, சுத்தமானதாக மாறுகிறது. வரும் அக்டோபர் 2ம் தேதி மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளை கொண்டாடும் நாம், கதர் ஆடைகளை வாங்கி உடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* நாக நதியை மீட்ட தமிழக பெண்கள்

பிரதமர் மோடி பேசுகையில், ‘இன்று நாம் உலக நதிகள் தினத்தை கொண்டாடுகிறோம். இந்த சமயத்தில், ஆண்டுக்கு ஒருமுறையாவது ‘ஆற்றங்கரை திருவிழா’க்களை நடத்த வேண்டும் தமிழகத்தின் திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓடும் ‘நாக நதி’ சில ஆண்டுகளுக்கு முன் வறண்டு போனது. நாக நதியை மீட்டெடுக்க அப்பகுதி பெண்கள் மேற்கொண்ட முயற்சியால் இன்று நதியில் தண்ணீர் நிரம்பியுள்ளது. தமிழக சகோதர, சகோதரிகளின் முயற்சியைப் போன்று இந்தியா முழுவதும் பல்வேறு நதிகளை மீட்டெடுக்க பலரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்,’ என பாராட்டினார்.

* மோடிக்கு பரிசளித்த அமெரிக்கா

அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நேற்று காலை நாடு திரும்பினார். அவரது இந்த பயணத்தில், அமெரிக்கா 157 புரதான பொருட்களை பரிசளித்துள்ளது. இதில் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த 8.5 செமீ உயரம் கொண்ட தமிழகத்தை சேர்ந்த நடராஜர் சிலையும் ஒன்றாகும். இந்த பொருட்கள் அனைத்தையும் மோடி தன்னுடன் விமானத்தில் கொண்டு வந்தார்.

* மோடி வந்தால் தான் போட்டுக்கொள்வேன் -அதிர வைத்த கிராமவாசி

மத்திய பிரதேச மாநிலம், தார் மாவட்டத்தில் உள்ள கிகார்வாஸ் பழங்குடி கிராமத்தில், வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணியை அதிகாரிகள் நேற்று முன்தினம் மேற்கொண்டனர். அப்போது, அந்த கிராமத்தில் உள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். ஒரு தம்பதி மட்டும் போட்டுக் கொள்ள மறுத்தனர். தடுப்பூசி குழுவினர் அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது அந்த கிராமவாசி, ‘உயரதிகாரிகள் முன்னிலையில்தான் தடுப்பூசி போட்டுக் கொள்வேன்,’ என்றார். உடனே, ‘துணை கலெக்டரை வரச் சொல்லட்டுமா?’ என்று குழுவினர் கேட்டனர். அதற்கு அந்த நபர், ‘துணை கலெக்டரிடம் சொல்லி, பிரதமர் மோடியை வரச்சொல்லுங்கள்’ என்று கூறியதை கேட்டதும் குழுவினர் அதிர்ந்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது. ‘இந்த கிராமத்தில் இந்த தம்பதி மட்டுமே தடுப்பூசி போடாமல் இருக்கின்றனர். அவர்களை சமாதானப்படுத்தி தடுப்பூசி போடப்படும்,’ என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

* 65 மணி நேர பயணத்தில் 20 கூட்டங்களில் பங்கேற்பு

ஐநா, குவாட் மாநாடுகளில் பங்கேற்க பிரதமர் மோடி கடந்த 22ம் தேதி அமெரிக்கா புறப்பட்டு சென்றார். இந்த 4 நாள் பயணத்தில் 65 மணி நேரம் அவர் அமெரிக்காவில் தங்கியிருந்தார். இதில் 20 கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். நீண்ட தூர பயணம் என்பதால் விமான பயணத்திலேயே கோப்புகளை பார்த்தததோடு மட்டுமின்றி, அதிகாரிகளுடன் 4 கூட்டங்களை விமானத்திலயே மோடி நடத்தி உள்ளார். அமெரிக்காவில் இறங்கியதும் ஓட்டலில் 3 கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். பல்வேறு நிறுவன சிஇஓ.க்களுடன் 5 கூட்டங்களிலும், அமெரிக்க அதிபர் பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஆஸ்திரேலிய, ஜப்பான் பிரதமர்களுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார். குவாட் கூட்டத்தில் பங்கேற்ற அவர், இந்திய அதிகாரிகளுடன் அமெரிக்காவில் 3 கூட்டங்களை நடத்தி உள்ளார். அந்த வகையில் மோடியின் மிக பிஸியான பயணமாக அமெரிக்க பயணம் அமைந்ததாக அரசு தரப்பு கூறி உள்ளது.

Related Stories: