போலீஸ் என் கையில் இருக்கு... நீதிமன்றத்தை பார்த்து பயப்படாதீங்க: திரிபுரா பாஜ முதல்வர் பிப்லாப் தேப் அதிரடி

அகார்தலா: ‘‘அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் நீதிமன்ற உத்தரவுக்கெல்லாம் பயப்படாதீர்கள். நீதிமன்ற அவமதிப்புக்காக யாரையும் கைது செய்து விட முடியாது’’ என திரிபுரா மாநில பாஜ முதல்வர் பிப்லாப் தேப் பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. திரிபுரா மாநிலம் அகார்தலாவில் ஐஏஎஸ் அதிகாரிகள் சங்க மாநாடு நேற்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக அம்மாநில முதல்வர் பிப்லாப் தேப் பங்கேற்று பேசியதாவது:  சில விஷயங்களில் நீதிமன்ற உத்தரவால் பிரச்னை ஏற்படும் என சில அதிகாரிகள் என்னிடம் கூறுகிறார்கள். அது எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. என்ன பிரச்னை ஏற்பட்டு விடும்? நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளாகி விடுவோம் என்பதற்காக சிலர் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்கின்றனர். நான் கேட்கிறேன், நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக யார் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள், சொல்லுங்கள் பார்ப்போம்.

நீதிமன்ற அவமதிப்புக்காக யாரையாவது சிறைக்கு அனுப்புவது அவ்வளவு சுலபமல்ல. அதற்கு போலீஸ் வேண்டும். போலீஸ் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் அல்ல. நீதிமன்றம் போலீசுக்கு உத்தரவிட்டாலும், ‘நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம், அவர் இன்னும் கிடைக்கவில்லை’ என பதில் கூறி விடுவோம். எனவே, நீதிமன்றத்தை பார்த்து இனி பயப்படாதீர்கள். இந்த அரசை நிர்வாகிப்பது நான்தான். யார் ஆட்சி செய்கிறார்களோ அவர்களுக்கு தான் உச்சபட்ச அதிகாரம் இருக்கிறது. மக்களுக்கு தான் முதல் அதிகாரம். அவர்கள்தான் இந்த அரசை தேர்வு செய்துள்ளனர். நீதிமன்றம் அல்ல. இவ்வாறு அவர் கூறி உள்ளார். இந்த பேச்சுக்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அரசியல் சாசன சட்டத்தை மீறியதற்காக திரிபுரா முதல்வர் பதவி விலக வேண்டுமெனவும் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

Related Stories:

>