அமெரிக்காவில் கமலா ஹாரிஸ் துணை அதிபராகும்போது இந்தியாவில் சோனியா ஏன் பிரதமராக கூடாது? ஒன்றிய அமைச்சர் அதவாலே கருத்தால் சலசலப்பு

இந்தூர்: அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபாராகும்போது,  இந்தியாவில் சோனியா காந்தியும் பிரதமராகி இருக்கலாம்,’ என்று ஒன்றிய அமைச்சர்  ராம்தாஸ் அதாவலே கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய குடியரசு கட்சி (அ) தலைவர் ராமதாஸ் அதவாலே. பாஜ கூட்டணியில் உள்ள இவர், ஒன்றிய அரசில் அமைச்சராகவும் இருக்கிறார். மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் நேற்று முன்தினம் இவர் அளித்த பேட்டி, பாஜ கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அவர் தனது பேட்டியில் கூறியதாவது: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை வெளிநாட்டை சேர்ந்தவர் என்று கூறுவது அர்த்தமற்றது. அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராகும் போது, இந்தியாவில் சோனியா காந்தியும் பிரதமர் ஆவதில் என்ன தவறு  இருக்கிறது? 2004ம் ஆண்டில் ஐமு கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்த போது, சோனியா பிரதமராகி இருக்கலாம். அதே நேரம், மன்மோகன் சிங்குக்கு பதிலாக  தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத் பவாரை பிரதமராக்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இந்திய குடிமகனான முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவி என்ற நிலையிலும், மக்களவை எம்பி என்ற நிலையிலும் இருக்கும் சோனியாவால் ஏன் பிரதமராக முடியவில்லை? என்று தெரியவில்லை. இவரை வெளிநாட்டுக்காரர் என்ற கூறிவிட்டு,  1999ம் ஆண்டு காங்கிரசில் இருந்து விலகிய சரத்பவாரை அப்போதே பிரதமராக்கி இருந்தால், காங்கிரஸ் அதிக பலம் பெற்றிருக்கும். பஞ்சாப் முதல்வராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அமரீந்தர் சிங், பாஜ அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தால், பஞ்சாபில் சட்டப்பேரவை தேர்தல் மிகப்பெரிய திருப்பத்தை சந்திக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: