மூன்றாவது ஒருநாள் போட்டி இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி: சேசிங்கில் சாதனை

மெக்கே: ஆஸ்திரேலிய மகளிர் அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்ற இந்தியா, ஒருநாள் போட்டி சேசிங்கில் தனது அதிகபட்ச இலக்கை எட்டி சாதனை படைத்தது. மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 ஆட்டத்திலும் வென்ற ஆஸ்திரேலியா தொடரையும் கைப்பற்றிவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி ரே மிட்செல் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்று பேட் செய்த ஆஸி. அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 264 ரன் குவித்தது. ஆஷ்லி கார்டனர் 67, பெத் மூனி 52, டாலியா மெக்ராத் 47, அலிஸா ஹீலி 35, எல்லிஸ் பெர்ரி 26 ரன் விளாசினர்.

இந்திய பந்துவீச்சில் ஜுலன் கோஸ்வாமி, பூஜா வஸ்த்ராகர் தலா 3, ஸ்நேஹ் ராணா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இந்தியா 49.3 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 266 ரன் எடுத்து வென்றது. யாஸ்திகா பாட்டியா 64, ஷபாலி வர்மா 56, தீப்தி ஷர்மா 31, ஸ்நேஹ் ராணா 30, ஸ்மிரிதி மந்தனா 22, கேப்டன் மிதாலி 16 ரன் எடுத்தனர். ஒருநாள் போட்டிகளில் இந்திய மகளிர் அணி சேஸ் செய்த அதிகபட்ச இலக்காக இது அமைந்தது. ஜுலன் கோஸ்வாமி சிறந்த வீராங்கனை விருது பெற்றார். தொடர்ச்சியாக 26 ஒருநாள் போட்டிகளில் வென்றிருந்த ஆஸி. அணியின் சாதனைப் பயணம், இந்த தோல்வியால் முடிவுக்கு வந்தது. அடுத்து இரு அணிகளும் மோதும் டெஸ்ட் போட்டி கராரா ஓவல் மைதானத்தில் செப். 30ல் தொடங்குகிறது.

Related Stories: