ஜடேஜா அதிரடி ஆட்டம் கடைசி பந்தில் சிஎஸ்கே த்ரில் வெற்றி: மீண்டும் முதலிடத்துக்கு முன்னேற்றம்

அபுதாபி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், கடைசி பந்தில் த்ரில் வெற்றியை வசப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது. ஷேக் சையத் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. கில், வெங்கடேஷ் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். கில் 9 ரன் எடுத்து ரன் அவுட்டானார். வெங்கடேஷ் - திரிபாதி ஜோடி 2வது விக்கெட்டுக்கு 40 ரன் சேர்த்தது. வெங்கடேஷ் 18 ரன் எடுத்து தாகூர் பந்துவீச்சில் தோனி வசம் பிடிபட்டார்.

கேப்டன் மோர்கன் 8 ரன்னில் ஆட்டமிழக்க, திரிபாதி 45 ரன் (33 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஜடேஜா சுழலில் கிளீன் போல்டானார். நிதிஷ் ராணா உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்த... ஆந்த்ரே ரஸ்ஸல் 20 ரன் (15 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 26 ரன் (11 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன் குவித்தது. ராணா 37 ரன் (27 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), சுனில் நரைன் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை பந்துவீச்சில் ஹேசல்வுட், ஷர்துல் தாகூர் தலா 2, ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 172 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது.

ருதுராஜ் - டு பிளெஸ்ஸி ஜோடி முதல் விக்கெட்டுக்கு 74 ரன் சேர்த்து வலுவான தொடக்கத்தை கொடுத்தது. ருதுராஜ் 40 ரன் (28 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), டு பிளெஸ்ஸி 43 ரன் (30 பந்து, 7 பவுண்டரி) விளாசி வெளியேறினர். ராயுடு 10 ரன், மொயீன் அலி 32 ரன் (28 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தனர். சென்னை அணி எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வருண் வீசிய 18வது ஓவரில் ரெய்னா 11 ரன்னிலும் (ரன் அவுட்), கேப்டன் தோனி 1 ரன்னிலும் ஆட்டமிழந்தது பின்னடைவை கொடுத்தது. 2 ஓவரில் 26 ரன் தேவைப்பட்ட நிலையில், பிரசித் வீசிய 19வது ஓவரில் ஜடேஜா அடுத்தடுத்து 2 சிக்சர், 2 பவுண்டரி விளாசி மிரட்டினார்.

இதனால் கடைசி ஓவரில் 4 ரன் மட்டுமே தேவைப்பட்டது. நரைன் வீசிய முதல் பந்தில் சாம் கரன் (4) அவுட்டானார். எனினும், தாகூர் 3வது பந்தில் 3 ரன் எடுக்க, அடுத்த 3 பந்தில் 1 ரன் எடுத்தால் போதும் என்ற நிலையில் 5வது பந்தில் ஜடேஜா (22 ரன், 8 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விக்கெட்டை இழந்தார். பரபரப்பான கடைசி பந்தில் தீபக் சாஹர் 1 ரன் எடுக்க, சிஎஸ்கே 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. தாகூர் 3, தீபக் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கேகேஆர் பந்துவீச்சில் நரைன் 3, பிரசித், பெர்குசன், வருண், ரஸ்ஸல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஜடேஜா ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியால், சிஎஸ்கே அணி 16 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியதுடன் பிளே ஆப் சுற்று வாய்ப்பையும் உறுதி செய்தது.

* ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணி 7வது முறையாக கடைசி பந்தில் இலக்கை எட்டி சாதனை படைத்தது. மும்பை இந்தியன்ஸ் (6 வெற்றி) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

* தோனி கேப்டனாக இருந்த போட்டிகளில் சென்னை அணி ‘டை’ செய்ததில்லை என்ற வரலாறு நீடிக்கிறது. 2010ல் ரெய்னா தலைமையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடிய போட்டி சரிசமனில் முடிந்துள்ளது.

Related Stories: