சிட்லபாக்கம் ஏரியில் திருமாவளவன் ஆய்வு

சென்னை: சிட்லபாக்கம் ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஏரியின் அருகே இருந்த சமுதாய நலக்கூடம், தாய் சேய் நல விடுதி ஆகியவை இடிக்கப்பட்டன. இதையடுத்து, ஏரியின் அருகே உள்ள அரசு பள்ளி கட்டிடம் இடிக்கப்படப்போவதாக தகவல் வெளியானது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று அப் பகுதிக்கு நேரில் வந்து, அங்குள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து, ஆக்கிரமிப்பு பகுதிகளை பார்வையிட்டார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘50 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசிக்கும் ஏழை மக்களின் வீடுகளை இடிக்க உள்ளதாக வருவாய் துறையினர் தெரிவித்துள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர். நீர் நிலைகளை பாதுகாப்பது மிக முக்கியம். அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், இங்குள்ள மக்களை வெளியேற்றினால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கும். இந்த மக்களை இந்த இடத்திலேயே வசிக்கும் வகையில் தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன்’’ என்றார்.

Related Stories: