தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் அணைகள், ஏரிகளை கண்காணிக்க குழு அமைப்பு: பொறியாளர்கள் உரிய காரணங்களின்றி விடுப்பு எடுக்கவும் தடை

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், அணைகள், ஏரிகளை தீவிரமாக கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்து. மேலும், வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் கட்டுபாட்டு அறை திறக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த கால கட்டத்தில் சராசரி மழை அளவை காட்டிலும் கூடுதலாக மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் நீர்வளத்துறை கட்டுபாட்டில் உள்ள 89 அணைகள், 14098 ஏரிகளில் உரிய பராமரிப்பு பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அணை, ஏரிகளை கண்காணிக்க அணைகள் பராமரிப்பு மற்றும் இயக்கக தலைமை பொறியாளர் ராஜேந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.அந்த குழுவினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்துகின்றனர். அவர்கள் கடந்த காலங்களில் அதிக மழை பெய்து பாதிப்புள்ள பகுதிகளை கண்காணிக்கின்றனர். இந்த குழுவினர் அந்த பகுதிகளில் பாதிப்பை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி முன்னெச்சரிக்கையாக அணை, ஏரிகள், கால்வாய், வடிகால்வாய்களில் கரைகள் பலவீனமாக இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக அங்கு தற்காலிக புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. மேலும், நீர் நிலையகள், வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்பு இருந்தால் வடகிழக்கு பருவமழை பருவமழை முன்னதாக அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், பருவமழை காலங்களில் அணை, ஏரி கரைப்பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டால், அசம்பாவிதம் சம்பவம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் 5 லட்சம் மணல் மூட்டைகள் தயாராக வைக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்த மணல் மூட்டைகள் உபக கோட்ட அலுவலகங்களில் வைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.பருவமழை முன்னெச்சரிகை நடவடிக்கையாக வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அணைகளில் கட்டுபாட்டு அறை ஏற்படுத்தி 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். இந்த கட்டுபாட்டு அறை சென்னையில் அணைகள் பராமரிப்பு இயக்ககத்தில் அமைக்கப்படுகிறது. இதே போன்று மாநிலம் முழுவதும் 3 மண்டல தலைமை பொறியாளர் அலுவலகங்களில் கட்டுபாட்டு அறை திறக்கப்படுகிறது.

மேலும், அக்டோபர் 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை எக்காரணம் கொண்டும் பொறியாளர்கள் விடுப்பு எடுக்க கூடாது. அக்டோபர் 1ம் தேதி முதல் சுழற்சி முறையில் 24 மணிநேரம் 7 நாட்கள் பொறியாளர்கள், ஊழியர்கள் பணியமர்த்த வேண்டும். வரும் டிசம்பர் 31ம் தேதி வரை கட்டுபாட்டு அறையில் பணிபுரியும் பொறியாளர்கள், ஊழியர்கள் பணியர்த்தப்படுவதற்கான பட்டியலை தயார் செய்ய வேண்டும் என்று நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் ராமமூர்த்தி அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அக்டோபர் 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை எக்காரணம் கொண்டும் பொறியாளர்கள் விடுப்பு எடுக்க கூடாது

Related Stories:

>