நகை சேமிப்பு திட்டத்தில் ரூ.26 கோடி மோசடி கேரளா பேஷன் ஜூவல்லரியின் உரிமையாளர்கள் 2 பேர் கைது

சென்னை: மயிலாப்பூர், அண்ணாநகர் ஆகிய இடங்களில் கேரளா பேஷன் ஜூவல்லரி (கே.எப்.ஜே) என்ற நகைக்கடை இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர்களான சுனில் ெசரியன், அவரது சகோதரர் சுஜித் செரியன் ஆகியோர் 2016, 2017, 2018, 2019 ஆகிய 4 ஆண்டுகளில், பழைய தங்க நகைக்கு பதிலாக புதிய நகைகள்  தருகிறோம். வட்டி இல்லை. சூப்பர் சலுகையுடன் தங்க நகைகள் சேமிப்பு  திட்டம் போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை சினிமா நடிகை, நடிகர்கள் மூலம் வெளியிட்டு மக்களை கவர்ந்தனர். இதை பார்த்த ஏராளமானோர் தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேர்ந்தனர். ஆனால் முதிர்வு காலம் முடிந்தும் பலருக்கும் தங்க நகைகள் கைக்கு வந்து சேரவில்லை. பணமும் திரும்ப கிடைக்கவில்லை. தாங்கள் ஏமாற்றப்பபட்டதை அறிந்த மக்கள் அந்த கடையை முற்றுகையிட்டனர்.

அப்போது, அந்த நகைக்கடையின் உரிமையாளர்களான சுனில் செரியன், சுஜித் செரியன் ஆகியோர் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு காசோலைகளை வழங்கினர். ஆனால், அந்த காசோலைகள் வங்கயில் பணம் இல்லாமல் திரும்ப வந்தது. அதைதொடர்ந்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ஆசை வார்த்தை கூறி பொதுமக்களிடம் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்து மோசடி செய்தது தெரியவந்தது. மேலும், அதிகளவில் புகார்கள் குவிந்ததால் இந்த வழக்கு சென்னை மாநகர காவல் துறையில் இருந்து பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் சுரேஷ் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அதில், கேரளா பேஷன் ஜூவல்லரி நிறுவனத்தில் ரூ.26 கோடி முதலீடு செய்து ஏமந்ததாக 1,689 பேர் புகார் அளித்தது தெரியவந்தது. இதையடுத்து, கேரளா பேஷன் ஜூவல்லரியின் உரிமையாளர்களான சுனில் செரியன், சுஜித் செரியன் ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தீவிர விசாரணைக்கு பிறகு கேரளா பேஷன் ஜூவல்லரியின் உரிமையாளர்களான சுனில் செரியன், சுஜித் செரியன் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த மோசடி குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>