52 மணி நேரத்தில் 21,592 பழைய குற்றவாளிகளிடம் விசாரணை ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்: டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை

சென்னை: தமிழகம் முழுவதும் ரவுடிகளுக்கு எதிரான காவல் துறையின் கடுமையான நடவடிக்கை தொடரும் என்று டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம் கடந்த 52 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் 3,325 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு தமிழகத்தில் குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ள ஏ பிளஸ் ரவுடிகள் முதல் தாதாக்களையும், அதேபோல் குற்ற வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த தலைமறைவாக உள்ள நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க டிஜிபி சைலேந்திரபாபுக்கு தமிழகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அந்த உத்தரவின் படி கடந்த 3 நாட்களாக தமிழகம் முழுவதும் போலீஸ் கமிஷனர்கள், ஐஜிக்கள், மாவட்ட கண்காணிப்பாளர்கள் அவரவர் எல்லைக்களுக்குட்பட்ட காவல் நிலையங்களிலும் கொலை, கொலை முயற்சி, பஞ்சாயத்து, அடிதடி வழக்குகளில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள், தாதாக்களை கைது செய்து வருகின்றனர். இதுகுறித்து தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் கடந்த 23ம் தேதி இரவு முதல் முற்றுகை செயல்பாடு எனப்படும் ‘ஸ்டோர்மிங் ஆப்ரேஷன்’ மூலம் அதிரடி நவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 52 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் 21,592 பழைய குற்றவாளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்களில் தற்போது குற்ற வழக்குகளில் தொடர்புடைய 3,325 ரவுடிகள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளின் பிடியாணையின்படி கைதானவர்கள் 294 பேர் ஆவர். பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டுள்ள 972 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும் நன்னடைத்தைக்காக பினை ஆணை பெறப்பட்டு 2,526 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த அதிரடி நடவடிக்கையின் போது ரவுடிகளிடம் இருந்து 7 நாட்டுத்துப்பாக்கிகள், கத்திகள் உள்ளிட்ட பிற ஆயுதங்கள் 1,110 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொலை குற்றங்களில் ஈடுபடுகின்ற ரவுடிகளுக்கு எதிரான காவல்துறையின் இந்த கடுமையான நடவடிக்கைகள் தொடரும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>