உதவி கல்வி அதிகாரி வேலை வாங்கி தருவதாக ஆசிரியரிடம் ரூ.10 லட்சம் மோசடி 2 ஐஏஎஸ் அகாடமி உரிமையாளர்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை

சென்னை: உதவி கல்வி அதிகாரி பணி வாங்கி தருவதாக, தனியார் பள்ளி ஆசிரியரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக சென்னையை சேர்ந்த 2 ஐஏஎஸ் அகாடமி உரிமையாளர்கள் உட்பட 4 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடலூரை சேர்ந்தவர் சிலம்பரசன் (32). இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த வாரம் புகார் ஒன்று அளித்தார். அந்த புகார் குறித்து போலீசார் கூறியதாவது: சென்னையில் உள்ள நிமிர் ஐஏஎஸ் அகாடமி உரிமையாளர் ஜான்சன் என்பவரின் பழக்கம் சிலம்பரசனுக்கு ஏற்பட்டது. அப்போது, பள்ளி கல்வித்துறையில் உதவி கல்வி அதிகாரியாக வேலை வாங்கி தருவதாக ஜான்சன் கூறினார்.

அதற்காக அவரது நண்பரும் அக்னி ஐஏஎஸ் அகாடமி உரிமையாளரான சிவக்குமாரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அப்போது, சிவக்குமார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களை காட்டி கண்டிப்பாக வேலை வாங்கி தருவதாக நம்ப வைத்துள்ளனர். அதற்காக முதலில் ஆசிரியர் பணி வாங்கி  தருவதாக ரூ.3 லட்சம் கேட்டுள்ளனர். அதன்படி சிலம்பரசன் கொடுத்துள்ளார். பிறகு பள்ளி கல்வித்துறையில் உதவி கல்வி அதிகாரி பணி வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி மேற்கொண்டு ரூ.7 லட்சம் கொடுத்தால் உறுதியாக வேலை வாங்கி தருகிறேன் என்று ஜான்சன் மற்றும் சிவக்குமார் கூறியுள்ளனர். இதற்காக இடைத்தரகர்களாக மனோஜ், ரஞ்சித் ஆகியோர் செயல்பட்டுள்ளனர்.

அரசு பணி கிடைக்கும் என்று சிலம்பரசன் அவர்கள் கேட்ட ரூ.7 லட்சம் என மொத்தம் ரூ.10 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார்.ஆனால், சொன்னப்படி சிலம்பரசனுக்கு உதவி கல்வி அதிகாரி பணி வாங்கி தரவில்லை. இதனால் சிலம்பரசன் வேலைக்காக கொடுத்த ரூ.10 லட்சம் பணத்தை கேட்டுள்ளார். ஆனால், பணத்தை கொடுக்காமல் ஜான்சன், சிவக்குமார் மற்றும் இடைத்தரகர்கள் ரஞ்சித், மனோஜ் அகியோர் மிரட்டியுள்ளனர். அதைதொடர்ந்து சிலம்பரசன் தனது பணத்தை பெற்று தர கோரி புகார் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சிலம்பரசன் கொடுத்த புகாரின் படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், நிமிர் ஐஏஎஸ் அகாடமி உரிமையாளர் ஜான்சன், அக்னி ஐஏஎஸ் உரிமையாளர் சிவக்குமார் இடைத்தரகர்களான மனோஜ், ரஞ்சித் ஆகியோர் மூலம் ரூ.10 லட்சம் பணத்தை பெற்று மோசடி செய்தது உறுதியானது.

அதைதொடர்ந்து நிமிர் ஐஏஎஸ் அகாடமி உரிமையாளர் ஜான்சன், அக்னி ஐஏஎஸ் உரிமையாளர் சிவக்குமார் இடைத்தரகர்களாக செல்பட்ட மனோஜ், ரஞ்சித் ஆகியோர் மீது மோசடி, கூட்டுச்சதி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் எந்த நேரத்திலும் 2 ஐஏஎஸ் அகாடமி உரிமையாளர்கள் கைது செய்யப்படலாம் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>