கலைஞர் தலமரக்கன்று நடும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகிறது

சென்னை: கலைஞர் தலமரக்கன்று நடும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் 1 லட்சம் தலமரக்கன்றுகள் நடப்படுகிறது என்று அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி சென்னை,  நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் ‘கலைஞர்’ தலமரக்கன்றுகள் நடும் திட்டத்தைத் தொடங்கும் முகமாக நாகலிங்க தலமரக்கன்றை நட்டு விழாவைத் தொடங்கி வைத்தார். கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் ஒரு லட்சம் தரமரக்கன்றுகள் நடுவதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மூன்று மாதக் காலத்திற்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருநெல்வேலி, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, திருச்சி, சிவகங்கை, வேலூர் மாவட்டங்களில் உள்ள பல்வேறு கோயில்களில் அந்தந்த தலமரங்களான மாமரம், புன்னை, வில்வம், செண்பகம், மருதம், நாவல், சந்தனம், மகாக்கனி, இலுப்பை, கொய்யா, மகிழம் போன்ற மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கடம்ப மரத்தை வணங்கினால் கல்வியில் சிறந்து விளங்கலாம். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் உள்ள மூங்கில் மரத்தை வணங்கினால் இசை ஞானம் வளரும். மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் உள்ள மாமரத்தை வணங்கினால் வெற்றி கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

இத்தகு பெருமைமிகு தலமரங்கள், மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் மேலப்பரங்கிரி சுப்பிரமணிய சுவாமி கோயில், திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயில், சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளி அம்மன் கோயில், திருநெல்வேலி மாவட்டம் நெல்லையப்பர் கோயில், பாபநாசம் சுவாமி கோயில். அம்பாசமுத்திரம் காசிநாத சுவாமி கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் நடப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>