அதிமுக ஆட்சிகாலத்தில் 537 அறிவிப்புகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி

சென்னை: அதிமுக ஆட்சி காலத்தில், 537 அறிவிப்புகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நிலுவையில் போடப்பட்டதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து சென்னையில் நேற்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:  அதிமுக ஆட்சியில் 110 விதியில் வரிசையாக அறிவிப்பாக அறிவித்து வந்தார்கள். அவர்களே கூறிய அறிவிப்புகளில் 537 அறிவிப்புகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லாமல் நிலுவையில் போட்டவர் தான் எடப்பாடி பழனிசாமி. குறிப்பாக, 110 விதியின் கீழ் அறிவித்த 348 அறிவிப்புகளுக்கு ஆணைகள் வெளியிட்டார்கள். ஆனால், நிதி முழுமையாக ஒதுக்காமல் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. அடுத்ததாக 143 அறிவிப்புகளுக்கு ஆணை வெளியிட்டார்கள்.

ஆனால், ஒரு ரூபாய் கூட அதற்கு ஒதுக்கவில்லை. மேலும், 20 அறிவிப்புகள் குறித்து ஆணை வெளியிடவில்லை. நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை. அப்படியே நிலுவையில் உள்ளது. 26 அறிவிப்புகள் முழுமையாக கைவிடப்பட்டுள்ளது. வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என சட்டமன்றத்தில் அறிவித்துவிட்டு 26 அறிவிப்புகளை கைவிட்டிருக்கிறார்கள். ஆனால், எல்லாவற்றையும் நிறைவேற்றிக்கொண்டிருக்கும் திமுக அரசை பார்த்து அவர் கூறுவது எள்ளி நகையாடக்கூடிய ஒன்று. எடப்பாடி பழனிசாமி தன்னுடைய தவறை மறைப்பதற்காக திமுக அரசு மீது தொடர்ந்து குற்றம்சாட்டிக்கொண்டு இருக்கிறார்.  திமுக அரசை பொறுத்தவரையில், சொல்லியிருக்கக்கூடிய 505 வாக்குறுதிகளில் 222 அறிவிப்புகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதை எடப்பாடி பழனிசாமி மறந்துவிட்டார் போல. எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு மடியில் மொத்த கணத்தையும் வைத்துள்ள காரணத்தால் பதறிப்போய்  பேசிக்கொண்டிருக்கிறார். ஜனநாயகத்தை பற்றி எடப்பாடி பழனிசாமி பாடம் நடத்துவது என்பது கேலிக்கூத்தாக உள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம் தலைதூக்கி இருந்தது. திமுக அரசு மீது தொடர்ந்து குற்றம்சாட்டுவதை எடப்பாடி பழனிசாமி நிறுத்திக்கொள்ள வேண்டும்.இல்லையென்றால் அவர்களின் முகத்திரையை கிழிக்கக்கூடிய முயற்சியில் திமுக ஈடுபடும். மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த தொடர்ந்து அவர் முயற்சிக்கிறார். அவர் முயற்சி பழிக்காது. மக்கள் அவரைபற்றி நன்றாக தெரிந்துவைத்துள்ளார்கள். இவ்வாறு கூறினார்.

Related Stories:

>