×

கூட்டுறவு வங்கிகளில் முறைகேடு எதிரொலி அனைத்து நகை கடன்களை ஆய்வு செய்ய குழு: நவ.15க்குள் அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசு உத்தரவு

சென்னை: கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்கள் வழங்கியது தொடர்பாக மாநிலம் முழுவதும் இருந்து பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. இதையடுத்து அனைத்து நகைக்கடன்களையும் 100 சதவீதம் ஆய்வு செய்ய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  தமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின்போது திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், கூட்டுறவு வங்கியில் 5 சவரன் நகை அடமானம் வைத்திருந்தால், அது தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்து இருந்தார். அதன்படி, தமிழக சட்டமன்றத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 40 கிராமிற்குட்பட்டு வழங்கப்பட்ட பொது நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார்.

இதையடுத்து, அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் பயனாளிகளின் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, தகுதியான நபர்களின் விவரங்களை கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள் இறங்கினர். அப்போது, நாமக்கல், சேலம், கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றது கண்டறியப்பட்டது. குறிப்பாக, கடந்த அதிமுக ஆட்சியில் போலி நகைகளை அடமானம் வைத்து நகைக் கடன்களை பெற்றிருப்பதும், நகைகளை வைக்காமலேயே கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மாஜி அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமான நபருக்கு மட்டும் 267 நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியது. இது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குறிப்பாக கடந்த ஆட்சியில் நகைக் கடன் தள்ளுபடியாகும் என்ற தகவலை முன்கூட்டியே அறிந்தபோது இருந்த ஆளுங்கட்சியினர், இதுபோன்று முறைகேடுகளில் ஈடுபட்டு பல லட்சங்களை கூட்டுறவு சங்கங்களில் இருந்து பெற்றனர். தமிழகம் முழுவதும் எழுந்த இந்த புகார்களின் அடிப்படையில், மோசடி குறித்து முழுமையாக விசாரித்த பிறகே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் அதற்கான பணிகள் நடந்து வருகிறது என்று அரசு அறிவித்தது. மேலும், ஒருவருக்கு ஒரு கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்று கூறப்பட்டது. இந்தநிலையில், நகைக்கடன் முறைகேட்டை ஆய்வு செய்ய கூட்டுறவு சார்பதிவாளர், மத்திய கூட்டுறவு வங்கியின் சரக மேற்பார்வையாளர்/களமேலாளர், நகை மதிப்பீட்டாளர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர், அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகள் மேலாண்மை இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்றத்தில், முதலமைச்சரால் விதி 110ன் கீழ் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 40 கிராமிற்குட்பட்டு வழங்கப்பட்ட பொது நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நகைக்கடன்கள் வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. எனவே, இக்கடன்கள் மட்டுமின்றி, கூட்டுறவு நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள அனைத்து நகைக்கடன்களையும் 100 சதவீதம் ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியமாகிறது. எனவே, கூட்டுறவு நிறுவனங்களில் 31.3.2021 அன்று நிலுவையில் இருந்த பொது நகைக் கடன்களை 100 சதவீதம் ஆய்வும், மேலும் 1.4.2021 முதல் ஆய்வு நாள் வரை நிலுவையில் உள்ள பொது நகைக் கடன்களை 100 சதவீதம் ஆய்வும் மேற்கொள்ள வேண்டும்.
மண்டல இணைப்பதிவாளர்கள், 100 சதவீத நகைக்கடன்களை ஆய்வு செய்ய தேவையான நகை மதிப்பீட்டாளர் உள்ளிட்ட ஆய்வுக்குழு உறுப்பினர்கள் பட்டியலை மண்டலத்திற்கு அனுப்பிட வேண்டும். மண்டல இணைப்பதிவாளர்கள் அப்பட்டியலை பெற்று ஆய்வுக்குழு அமைப்பதற்கான செயல்முறை ஆணையினை உடன் வழங்கி அதன் நகலை இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆய்வு குழு பட்டியலில் உள்ள உறுப்பினர்களை பயிர்க் கடன் 2021 தள்ளுபடி கடன்களை மறு கூராய்வு செய்த சங்கத்திற்கு மீண்டும் 100 சதவீதம் நகைக் கடன் ஆய்வுக்கு அனுப்புவதை மண்டல இணைப்பதிவாளர்கள் தவிர்த்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சென்னை மண்டலத்தை பொறுத்த வரையில், சென்னை மண்டல கூடுதல் பதிவாளரின் கட்டுப்பாட்டில் இயங்கும் நகைக்கடன் வழங்கும் அனைத்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ள நகைக்கடன்களை 100 சதவீதம் ஆய்வு மேற்கொள்ளும் பொருட்டு தேவையான குழுக்களை தமது அளவில் அமைத்திட வேண்டும். ஒவ்வொரு ஆய்வு குழுவிலும், கூட்டுறவு சார்பதிவாளர், மத்திய கூட்டுறவு வங்கியின் சரக மேற்பார்வையாளர்/களமேலாளர், நகை மதிப்பீட்டாளர் இடம்பெற்றிருக்க வேண்டும். நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் பதிவாளரால் 100 சதவீத நகைக்கடன் ஆய்வு செய்வது தொடர்பாக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அறிவுரைகளுக்கிணங்க ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த ஆய்வுக்குழுக்கள், தமது ஆய்வுப்பணியை 15.11.2021க்குள் முடித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் சரக துணைப்பதிவாளரிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். துணைப்பதிவாளர்கள் சரக வாரியாக தமது சரகங்களில் உள்ள சங்கங்களில் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் தமதறிக்கையினை தொடர்புடைய மண்டல இணைப்பதிவாளருக்கு அனுப்பிட வேண்டும். சென்னை மண்டலத்தை பொறுத்தவரையில், நகைக்கடன் ஆய்வறிக்கைகளை சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் பெற்று தமது கட்டுப்பாட்டில் உள்ள துணைப்பதிவாளர்கள் கொண்ட குழு அமைத்து ஆய்வறிக்கைகளை பெற வேண்டும். இதர மண்டல அலுவலர்களை கொண்டு சரிபார்த்து பெறப்பட்ட அறிக்கையினை தொடர்புடைய மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் தமது மேலொப்பமிட்டு 20.11.2021க்குள் தவறாமல் பதிவாளருக்கு அனுப்பிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

* கூட்டுறவு நிறுவனங்களில் 31.3.2021 அன்று நிலுவையில் இருந்த பொது நகைக் கடன்களை 100 சதவீதம் ஆய்வும், மேலும் 1.4.2021 முதல் ஆய்வு நாள் வரை நிலுவையில் உள்ள பொது நகைக் கடன்களை 100 சதவீதம் ஆய்வும் மேற்கொள்ள வேண்டும்.
* சென்னை மண்டலத்தை பொறுத்த வரையில், சென்னை மண்டல கூடுதல் பதிவாளரின் கட்டுப்பாட்டில் இயங்கும் நகைக்கடன் வழங்கும் அனைத்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ள நகைக்கடன்களை 100 சதவீதம் ஆய்வு மேற்கொள்ளும் பொருட்டு தேவையான குழுக்களை தமது அளவில் அமைத்திட வேண்டும்.
* ஆய்வுக்குழுக்கள், தமது ஆய்வுப்பணியை 15.11.2021க்குள் முடித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் சரக துணைப்பதிவாளரிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

Tags : Government of Tamil Nadu , Co-operative Bank, Abuse, Jewelery Loan, Government of Tamil Nadu Order
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...