வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம்: திமுக உள்ளிட்ட கட்சிகள், விவசாய சங்கங்கள், வர்த்தகர்கள் ஆதரவு.!

சென்னை: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. தமிழகத்தில் போராட்டத்துக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் பஞ்சாப் உள்ளிட்ட பல மாநில விவசாயிகள் 300 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுடன் ஒன்றிய அரசு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியிலேயே முடிந்தது. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டம் பரவியது. தமிழகத்தில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் செப்டம்பர் 27ம் தேதி (நாளை) பாரத் பந்த் நடத்துவதற்கு டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் கூட்டமைப்பான சம்யுக்த் கிஷான் மோர்ச்சா அழைப்பு விடுத்தது. அதன்படி நாளை நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

இந்த போராட்டத்துக்கு நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் என 100க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதேபோல் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.  அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர்  கவுரவ் வல்லப் டெல்லியில் அளித்த பேட்டியில், விவசாயிகளை சந்திக்க அரசுக்கு நேரமில்லை.  முதல்முறையாக விவசாயத்துக்கு ஜிஎஸ்டி வரி போடப்பட்டுள்ளது. நாளை நடக்கும் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கும் என்றார். தமிழகத்திலும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு பெருகி உள்ளது. திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள், பாமக, தேமுதிக, மநீம, அமமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதுதவிர பல்வேறு விவசாய சங்கங்கள் மற்றும் வர்த்தக அமைப்புகள் ஆதரவு தெரிவித்து நாளை போராட்டத்தில் ஈடுபட உள்ளன. பெரும்பாலான மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட உள்ளன. நாகை மாவட்டத்தில் 20 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடக்கிறது. மாவட்டம் முழுவதும் 15,000 கடைகள் அடைக்கப்பட உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடக்கிறது.

ஒரு இடத்தில் ரயில் மறியல் நடக்கிறது. மாவட்டம் முழுவதும் 20,000 கடைகள் அடைக்கப்படுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடக்கிறது. நீடாமங்கலம், சிங்களாஞ்சேரி, திருத்துறைப்பூண்டி ஆகிய 3 இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் 60 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடக்கிறது. தஞ்சை, கும்பகோணம், பாபநாசம், பூதலூரில் ரயில் மறியல் போராட்டம் நடக்கிறது. 35,000 கடைகள் அடைக்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் 7 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடக்கிறது.  மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் கடைகள் அடைக்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 இடங்களில் சாலை மறியல் போராட்டம், ஒரு இடத்தில் ரயில் மறியல் போராட்டம் நடக்கிறது. 3,000 கடைகள் அடைக்கப்படவுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 4 இடங்களில் சாலை மறியல் நடக்கிறது. மாவட்டம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் 6 இடங்களில் சாலை மறியல் நடக்கிறது. மாவட்டம் முழுவதும் 1,200 கடைகள் அடைக்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் 17 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடக்கிறது.

திருவெறும்பூர், அந்தநல்லூர் பகுதியில் ரயில் மறியல் போராட்டம் நடக்கிறது. டெல்டா மாவட்டங்களில் மட்டும் சுமார் 99 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட உள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருவாரூர் மாவட்ட செயலாளரும், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட தலைவருமான மாசிலாமணி கூறுகையில், இந்திய விவசாயத்தையும், விவசாயிகளையும் பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகள் வசம் ஒப்படைக்கும் நோக்கில் ஒன்றிய அரசு, 3 வேளாண் சட்ட திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இதை கண்டித்து இந்திய விவசாயிகள் முன்னணி மற்றும் அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நாளை நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடக்கிறது. இதற்கு பெரும்பாலான கட்சிகள், விவசாய சங்கங்கள், வர்த்தக சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளது என்றார். முழு அடைப்பு போராட்டத்தையொட்டி தமிழகம் முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: