கீழடியில் குவிந்த பொதுமக்கள்: இன்று ஒரு நாள் மட்டும் அனுமதி.!

திருப்புவனம்: கீழடி அகழாய்வு தளங்களை பார்வையிட இன்று ஒரு நாள் மட்டும் மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கீழடியை பார்வையிட்டு வருகின்றனர். தமிழக தொல்லியல் துறை சார்பில் கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய தளங்களில் தொடங்கப்பட்ட ஏழாம் கட்ட அகழாய்வு பணி செப்டம்பர் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பணிகள் முன்னதாகவே முடிவடைந்ததை தொடர்ந்து அகழாய்வு குழிகள் அனைத்தும் தார்ப்பாய் போட்டு மூடப்பட்டது. தமிழக அரசு, திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க உள்ளதால், ஏழாம் கட்ட அகழாய்வு பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்படவில்லை.

இந்த நிலையில், உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, தென் தமிழக சுற்றுலா முகவர்கள் சங்கம் பார்வையாளர்களை கீழடிக்கு வர அழைப்பு விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து தொல்லியல் துறையினர், இன்று ஒரு நாள் மட்டும் கீழடி, கொந்தகை ஆகிய இரு தளங்களை பொதுமக்கள் கண்டு ரசிக்க அனுமதி அளித்துள்ளது. தொடர்ந்து, காலை 9 மணியளவில் அகழாய்வு தளங்கள் திறக்கப்பட்டன. ஏராளமான பொதுமக்கள் கீழடியை கண்டு ரசித்தனர். மேலும், பழங்கால பொருட்கள் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. தொல்லியல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர். அகரம் தளம் திறக்கப்படாது என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>