செல்போன் டவர் அமைத்து தருவதாக ஆசைவார்த்தை: எஸ்.எம்.எஸ். அனுப்பி பணம் வசூலித்த மோசடி கும்பல் அதிரடி கைது.!

சேலம்: சேலம் சித்தனூரை சேர்ந்தவர் சகாயமேரி (55). சேலம் ரயில்வேயில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது செல்போனுக்கு தனியார் நிறுவனத்தின் பெயரில் செல்போன் டவர் அமைத்து தருவதாக எஸ்.எம்.எஸ். ஒன்று வந்தது. அந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள், உங்களது நிலத்தில் செல்போன் டவர்கள் அமைத்து தர வேண்டுமானால் 1,350 சதுரடி நிலம் இருக்க வேண்டும், அதற்கு அட்வான்சாக ரூ.30 லட்சமும், மாதம்தோறும் வாடகையாக ரூ.35 ஆயிரமும் தருவோம் என ஆசைவார்த்தை கூறினர். இந்த டவரை அமைக்க வேண்டுமானால் கூலி ஆட்கள் செலவு, கொண்டுவரும் செலவு உள்பட பல்வேறு செலவுகளுக்கு பணம் கட்டவேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதனை உண்மை என நம்பிய சகாயமேரியும் ரூ.6,92,500ஐ அவர்கள் கொடுத்த  வங்கிக் கணக்குக்கு செலுத்தினார். வங்கி கணக்குக்கு பணம் வந்ததையடுத்து அத்தொகையை எடுத்துக்கொண்ட நபர்கள், பின்னர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த சகாயமேரி, சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இந்த மோசடி கும்பலை இந்த மோசடி கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. மோசடி நபர்கள் பயன்படுத்திய செல்போன் நம்பரை போலீசார் ஆராய்ந்ததில், அவர்கள் பெங்களூரில் இருந்து சேலம் வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சேலம் புதிய பஸ் நிலையத்தில் முகாமிட்டு கண்காணித்தனர்.

இதில், திருப்பூரை சேர்ந்த மல்லையா (38) சந்திரசேகர் (36), நவீன் (21), சுதாகரன் (19), டெல்லியை சேர்ந்த சிவா (30), சூரியா (24), திண்டுக்கல்லை சேர்ந்த தனசேகர் (27), மோகன்பிரபு (23),  குணசேகரன் (23), பிரபு (20), சவுந்திரபாண்டியன் (28), அருண்குமார் (23), சதிஷ்குமார் (24) ஆகிய 13 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். திருப்பூர் மல்லையாதான் இந்த மோசடி கும்பலுக்கு தலைவனாக இருந்து செயல்பட்டுள்ளான். விசாரணையில், இவர்கள் பெங்களூரில் தங்கியிருந்து தமிழ்நாடு முழுவதும் போலியாக எஸ்.எம்.எஸ். அனுப்பி, டவர் அமைத்துத் தருவதாக கூறி ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 2 லேப்டாப், 35 செல்போன்கள், 45 சிம்கார்டுகள், 20 வங்கி கணக்கு புத்தகங்கள், ரூ.48,500 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அனைவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

Related Stories: