இன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு.!

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 20 ஆயிரம் மையங்களில் 3வது கட்ட மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. தகுதி வாய்ந்த 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, கடந்த செப்.12ம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டு 20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் திட்டமிட்ட இலக்கை விட அதிகமாக மொத்தம் 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையடுத்து, இரண்டாவது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் கடந்த 19ம் தேதி நடந்தது. இதில் 15 லட்சம் பேருக்கு தடுப்புசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிட கூடுதலாக அதாவது மொத்தம் 16 லட்சத்து 43 ஆயிரத்து 879 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இந்தநிலையில் 3வது மெகா தடுப்பூசி முகாம்கள் செப்டம்பர் 26ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் தீவிர தடுப்பூசி முகாம்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. இன்று 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் அனைத்து தரப்பினரும் வரிசையில் நின்று சமூக இடைவெளியை கடைபிடித்து தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர். தடுப்பூசி மையங்களில் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.  

இதேபோல், சென்னையை பொருத்தவரை கடந்த ஆகஸ்டு 26ம் தேதி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்ற 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 1 லட்சத்து 35 ஆயிரம் நபர்களுக்கும், கடந்த செப்டம்பர் 12ம் தேதி நடைபெற்ற 1,600 தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 1 லட்சத்து 91 ஆயிரத்து 350 தடுப்பூசிகளும், 19ம் தேதி நடைபெற்ற 1,600 தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 2 லட்சத்து 2 ஆயிரத்து 931 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், இன்று தமிழகம் முழுவதும் 3ம் கட்ட மெகா கொரோனாத் தடுப்பூசி  முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 20 ஆயிரம் முகாம்கள் மூலம் 15 லட்சம்  பேருக்கு போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு தற்போது  29 லட்சம் கொரோனாத் தடுப்பூசிகள் வந்துள்ளது. அவை ஏற்கனவே அனைத்து  மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளது.

15 லட்சம் தடுப்பூசிகள் போடுவதற்கு இலக்கு  நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், 20 லட்சத்தில் இருந்து 25 லட்சம் பேருக்கு  தடுப்பூசிகள் போடப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை எதிர்பார்த்துள்ளது.  இதேபோல், இன்று சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் 1,600 மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் சிறப்பு முகாம்கள் அமைந்துள்ள இடங்களை பொதுமக்கள் //chennaicorporation.gov.in/gcc/covid&details/megavacdet.jsp-என்ற மாநகராட்சியின் இணையதள இணைப்பின் வாயிலாகவும், 044-25384520, 044-46122300 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டும் தெரிந்துகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்களை ஆய்வு செய்தார். திருவிக நகர் தொகுதிக்கு உட்பட்ட புளியந்தோப்பு, ஓட்டேரி பேரக்ஸ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி பள்ளி, பட்டாளம் தட்சணாமூர்த்தி திருமண மண்டபம் ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்டார். பின்னர், ராயபுரம், சென்ட்ரல் உட்பட சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.

Related Stories:

>