தேனி ஆர்டிஓ அலுவலக வளாகத்தில் சிதிலமடைந்த சோதனை ஓடுதளம்: சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

தேனி: தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள சோதனை ஓடுதளம் உள்ளிட்ட சாலைகள் சேதமடைந்த நிலையில் உள்ளன. அவற்றை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். தேனி வட்டார போக்குவரத்து அலுவலகம் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ளது. இங்கு நாள்தோறும் ஓட்டுனர் உரிமம், பேருந்து நடத்துனர் உரிமம், புதிய மோட்டார் வாகனங்களுக்கான பதிவு எண் சான்றிதழ் வழங்குதல், விபத்துக்குள்ளான வாகனங்களை ஆய்வு செய்தல், கார், வேன், லாரி, பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களின் தகுதி சான்று வழங்கும் பணி என பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளுக்காக தினசரி ஏராளமானோர் தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.

இந்த வளாகத்திற்குள் புதியதாக வாகனம் ஓட்டி பழகி ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பித்தோரை ஆய்வு செய்து உரிமம் வழங்க மேடு, பள்ளம், மலை மாதிரி போன்ற ஓடுதளங்கள் உள்ளன. ஆனால், உரிய பராமரிப்பு இல்லாததால், இந்த சோதனை ஓடுதளங்கள் சில ஆண்டுகளாகவே சிதிலமடைந்த நிலையில் உள்ளன. மேலும் தார்ச்சாலைகளில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. அலுவலக நுழைவுவாயில் சாலையும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே, வட்டார போக்குவரத்து நிர்வாகம் இதனை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories:

>