ஊட்டி தாவரவியல் பூங்காவில் இன்று முதல் மலர் அலங்காரத்தை காண சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

ஊட்டி:  இரண்டாம் சீசனுக்காக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மலர் அலங்காரங்களை காண சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் அனுமதியளிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஊட்டியில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முதல் சீசன் கடைபிடிக்கப்படுகிறது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இரண்டாம் சீசன் கடைபிடிக்கப்படுகிறது. முதல் சீசனின்போது வெளிமாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து பல லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துச் செல்வார்கள். இதனால், இந்த சமயங்களில் வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.

மேலும், பல்வேறு மலர் அலங்காரங்களும் மேற்கொள்ளப்படும். இரண்டாம் சீசனின்போது, மலர் கண்காட்சி மற்றும் அதிக அளவிலான மலர் அலங்காரம் மேற்கொள்ளப்படுவதில்லை.

எனினும், பூங்கா முழுவதிலும் மலர் செடிகள் நடவு செய்யப்படும். மேலும், குறைந்த அளவிலான மலர் தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு மலர் அலங்காரம் மேற்கொள்ளப்படும். இந்நிலையில், இரண்டாம் சீசன் இந்த மாதம் துவங்கிய நிலையில், தற்போது தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. மாடங்களில் 9 ஆயிரம் தொட்டிகளை கொண்டு பல்வேறு மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்து. இது தவிர சிறிய புல் மைதானத்தில் ஒரு மலரின் வடிவில் 3.5 ஆயிரம் மலர் தொட்டிகள், அழகு தாவரங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள 2.5 லட்சம் மலர் செடிகளிலும் மலர்கள் பூத்துள்ளன.  

தற்போது, ஊட்டியை சுற்றுலா பயணிகள் முற்றுகையிட துவங்கியுள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால், இன்று முதல் மலர் அலங்காரங்களை அருகில் சென்று காண சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. மேலும், பராமரிப்பு பணி காரணமாக மூடப்பட்டிருந்த பெரிய புல் மைதானமும் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் சீனுக்கு ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் இரு மாதங்கள் பூங்காவில் உள்ள மலர் அலங்காரங்களையும், செடிகளில் பூத்து குலுங்கும் வண்ண வண்ண மலர்களையும் கண்டு ரசிக்கலாம்.

Related Stories: