இரண்டு வருடங்களாக மூங்கில் மரங்களில் சிக்கிய மின்கம்பிகள்: பேராபத்து நிகழும் முன் அகற்ற வலியுறுத்தல்

கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே இரண்டு வருடங்களாக மூங்கில் மரங்களுக்கு இடையே சிக்கிய மின்கம்பிகளை பேராபத்து நிகழும் முன் அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே குத்தவக்கரை கிராமத்திலிருந்து சரஸ்வதி விளாகம் கிராமத்திற்கு செல்லும் வழியில் தெரு மின்விளக்குகள் ஒளிர்வதற்கான மின்கம்பங்கள் உள்ளன. இந்த மின்கம்பங்களின் வழியே மின்கம்பிகள் செல்கின்றன. இந்த மின் கம்பிகள் சாலையோரம் உள்ள மூங்கில் மரங்களுக்கிடையே ஒன்றோடொன்று பிணைந்து சிக்கிக் கொண்டு இருக்கிறது.

இந்த மின் கம்பிகள் கடந்த இரண்டு வருடங்களாக இப்படியே மூங்கில் மரத்துக்குள் சிக்கிக்கொண்டு உள்ளன. இதனால் அப்பகுதியில் மின்சாரம் அடிக்கடி தடை ஏற்படுகிறது. மழைக்காலங்களில் மழை பெய்தால் மூங்கில் மரத்தில் உள்ள இலைகள் நனைந்து மின்கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கினால் சாலை ஓரத்தில் செல்பவர்கள் பெரும் ஆபத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த சாலையின் வழியே செல்லும்போது அச்சத்துடன் சென்று வருகின்றனர். மூங்கில் மரத்திற்குள் சிக்கிக் கொண்டுள்ள மின் கம்பிகளை அகற்ற கிராம மக்கள் சார்பில் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மின்சார வாரிய ஊழியர்கள் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு மூங்கில் மரத்துக்கிடையே சிக்கியுள்ள மின் கம்பிகளை சரி செய்து சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: