பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் சவுடு, வண்டல் மண் எடுக்க வழங்கிய அனுமதியை எதிர்த்து வழக்கு: கனிம வளத்துறை அறிக்கை தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் வண்டல், சவுடு மண் எடுக்க அனுமதி அளித்ததை எதிர்த்த வழக்கில் கனிம வளத்துறை பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் பழைய பல்லாவரத்தை சேர்ந்த பி.சசிதரன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் களிமண், சவுடு மண், கிராவல் ஆகியவற்றை எடுக்க கூடாது என்று தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளில் கடந்த 2017 ஏப்ரல் 27ல் திருத்தம் கொண்டுவரப்பட்டு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், பொதுப்பணித் துறை அல்லது ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிறுவனங்கள் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் மாநிலத்திலுள்ள (சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் நீங்கலாக) குளங்கள், வாய்க்கால்கள் மற்றும் நீர்த்தேக்கங்களின் படுகைகளிலிருந்து களிமண், வண்டல் மண், சவுடு மற்றும் சரளைக் கற்களை வெட்டி எடுப்பதற்காக பொதுப்பணித்துறையின் செயற் பொறியாளர் அல்லது ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களின் செயற் பொறியாளர், குளங்கள், வாய்க்கால்கள் மற்றும் நீர்த்தேக்கங்களின் பட்டியலை தயாரிக்க வேண்டும்.

 தகுதி வாய்ந்த பகுதிகளை வரையறை செய்து, குளங்கள், வாய்க்கால்கள், நீர்த்தேக்கங்களிலிருந்து அத்தகைய கனிமத்தை வெட்டி எடுப்பதற்கு, வரையறுக்கப்பட வேண்டிய நிபந்தனைகளுடன் ஒவ்வொரு பகுதியிலும் அகற்றப்பட வேண்டிய அத்தகைய கனிமத்தின் மதிப்பீட்டளவுடன், குளங்கள், வாய்க்கால்கள் மற்றும் நீர்த்தேக்கங்களின் படுகைகளிலிருந்து களிமண், வண்டல்மண், சவுடு மற்றும் சரளைக் கற்களை அகற்றுவதற்காக, அவர்களின் செயற்குறிப்பை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வேண்டும்.

 மாவட்ட ஆட்சியர், மேற்சொன்ன பட்டியலை, மாவட்ட அரசிதழில், அறிவிக்கையிட வேண்டும். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருநிலை கிராமத்தில் உள்ள பொதுப்பணித்துறை குளத்திலும், புதுவயல் கிராமத்தில் உள்ள பொதுப்பணித்துறை குளத்திலும் சிறு கனிம சலுகை விதிமுறைகளுக்கு முரணாக சவுடுமண், வண்டல்மண் எடுக்க கவுரிசங்கர், முத்துராஜ் ஆகியோருக்கு கலெக்டர் அனுமதி வழங்கியுள்ளார். எனவே, விதிகளுக்கு முரணாக இந்த குளங்களில் சவுடு மண், வண்டல்மண் எடுக்க தரப்பட்ட அனுமதியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

 இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் டி.அலெக்சிஸ் சுதாகர் ஆஜராகி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பொதுப்பணித்துறை குளங்களில் சாதாரண மண் எடுக்க எந்த தடையும் இல்லை. ஆனால் அதற்கு குத்தகை தரப்பட வேண்டும். அனுமதி தரக்கூடாது என்று விதிகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருவள்ளூர் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனர் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories:

>